ஓ !

 ஓ  !..

                                                            -திருவருணை சிவசு 


கி.பி 2222 !



எல்லாமே சுருங்கிவிட்டது . நீண்ட மனித வாழ்க்கை தவிர.  எல்லா மனித அவயங்களும், தலை தவிர ஜெனெடிக் இன்ஜினியரிங் ,3டி பிரிண்டர் இணைந்த தொழில் நுட்பம் வழியே கிடைக்கிறது. பணக்கார நாய்களுக்குக்கூட தேவையான அவயங்கள் கிடைக்கிறது.     சென்னை ரங்கநாத தெரு,  ரங்காவாக சுருங்கிவிட்டது. மனித வார்த்தைகள் உட்பட எல்லாமே சுருக்கம்தான் . எல்லோரும் மெய்நிகர் அறிவு உலகில் பொய்யான வாழ்க்கை வாழ தொடங்கி ஒரு தலைமுறைக்கு மேல்  ஆகிவிட்டது.


முன்பெல்லாம் ,2000 ஆண்டுகளில் ரங்காவில் எக்கச்சக்கமாய் ஜனத்திரள் கூடுமாம் . நிரஞ்சன் எள்ளு  தாத்தாவும், 98 வயதில் தானாகவே வாழ்வு போதும் என்று அரசிடம் சொல்லி  வாழ்வை முடித்துக்கொண்ட அப்பாவும் சொல்லியிருக்கிருக்கின்றனர் . ‘ரங்கநாதன் தெரு’   என்று அப்போது பெயராம் .



எப்போதும் ஒரே விழாக்கோலம் கொண்டிருக்கும் என்றும் .  ஆடி தள்ளுபடி என்று ஒரு மெகா சேல்  நடக்கும்போது ,தெரு  முழுக்க வெறும் மனித தலைகள்தான் தெரியுமாம்.   2020 -இல் வந்த கோரோனோ காலம் தவிர , மக்கள் மிக பரபரப்பாய் வாழ்ந்த காலம் அது. மனிதர்களுக்கு  நிறைய பொழுது இருந்த காலம் போல. 


எள்ளுத்தாத்தா கணபதி தனக்கு சொல்லியிருக்கிறார் என கொள்ளுத்தாத்தா  நாகா முன்பு சொல்லியது  நினைவு வந்தது   நிரஞ்சனுக்கு . எள்ளுத்தாத்தா கணபதி  புடவை கடையில் அரைநாளுக்கு மேல் காத்திருந்திருக்கிறாராம்.  கை நிறைய பையுடன்,இலவச காய்கறியோடு ஆட்டோ என்ற மூன்று சக்கரவாகனத்தில் பயணித்தது பற்றி .  ஆட்டோவை  ஒரு வேண்டேஜ் மீயூசியத்தில் பார்த்த நினைவு நிரஞ்சனுக்கு. 



இரு நூறாண்டுகளில்  எவ்வளவு  மாற்றங்கள். கணினி யுகத்துக்கு பின் வந்த செயற்கை நுண்ணறிவுக்காலம்,ஆர்டிபீஷியல்  இன்டெலிஜென்ஸ்   மனித வாழ்க்கையை ரொம்ப எளிமையாக்கி விட்டது.  அதே நேரம்  எல்லாவற்றிற்கும் ஒரு கட்டுப்பாடு.  ரங்காவில் ஒருவருக்கு வாரம் ஒருமுறை மட்டுமே காரில் செல்வதற்கு அனுமதி. RFID பொருந்திய கணனி  கட்டுப்பாடு.  எல்லாமே சூரிய சக்தி கார்கள் . ஒரு மிக முக்கிய விடயமாக நிரஞ்சன்  ரங்காவிற்கு இன்று வர வேண்டியதாகிவிட்டது.


நிரஞ்சனுக்கு முன்னாள் காரில் சென்றது ’ பாரத் ஒர்க் ‘  விசாவில் வந்திருக்கும் அமெரிக்கன் போல!  சற்று நிதானமாக சென்றான். இந்திய பொருளாதார வளர்ச்சி அப்படி.


காரில் இருந்து இறங்கியவுடன் சக்கரங்கள் உள்வாங்கிக்கொள்ள மிக சின்னதான வடிவமான காரை தானியங்கி லிப்ட் உள்வாங்கிக்கொண்டு பார்க்கிங் ஏரியாவிற்கு எடுத்து செல்ல ஆதார் கார்டை நுழைத்தான் நிரஞ்சன்.


கார் பார்கிங்கிலிருந்து வெளியே வந்த நிரஞ்சன் அண்ணாந்து பார்த்தான். எந்த திரையுமின்றி வர்சுவல் ரியாலிட்டி மூலம் வான் வெளியில்  விளம்பரம். 






‘திருமணமா ? கலாச்சரா விழாவா ? புடவை கட்டிக்கொள்ள கற்று தருகிறோம் ‘  என்றது விளம்பரம் . உடனே மனைவி நிஷிக்கு  சரியாக புடவை கட்ட தெரியவில்லை என்று நினைவு வர விளம்பரத்தை நோக்கி கையாட்ட,  வேண்டிய  விவரம் சட்டை பாக்கெட்டில் வைத்திருத்த கைபேசிக்கு வந்து விட்ட


ஆதாரமாய்  ஒரு சின்ன சிணுங்கல் ! சிணுங்கல் சத்தம் அளவு அவனுக்கு மட்டுமே கேட்கும் அளவு.

இல்லையேல் அரசு காவல் ரோபோ எங்கிருந்து வருமோ தெரியாது , அபராதத்தை கைபேசியில் பதித்து அரசுக்கு அனுப்பி மாத  சம்பளத்தில்  பிடித்தம் செய்துவிடும்.  எல்லாமே ஒரு கட்டுப்பாட்டுக்குள் வாழும் உலகம்.



இந்த கட்டுப்பாடுகள் பிடிக்காத சிலர் , இன்னமும் இந்த கட்டுப்பாடுகள் அமுலாகாத நிலாவின் ‘அல்போன்சுஸ் ‘
பகுதிக்கு குடி புகுந்துள்ளார்கள். அவர்கள் அப்பர் மிடில் கிளாஸ் ,போகலாம் !


நிரஞ்சன்,  ரங்காவை கடக்க எஸ்கலேட்டர் வழியே நடந்து செல்ல யத்தனிக்க குறுக்கே ஒரு இளைஞன்.  ரோபாவா , மனிதனா என கண்ணை பார்க்க கண் சிமிட்ட ‘ நான் உங்களை போல மனிதன்தான் ‘  என்றான்,  நிரஞ்சன் சந்தேகம் அறிந்த அந்த இளைஞ்சன்.


மனிதர்கள் மனதில் நினைப்பதை அறிய பெறு முயற்சி செய்திக்கொண்டிருக்கிறர்கள்.  இன்னமும்  முடியவில்லை. இது வந்தால் நிறைய பேர் செவ்வாய் கிரகமமோ, நிலவிற்கோ செல்ல ரெடியாக இருப்பதாக செய்தி. எலன் முஸ்க் ஸ்பேஸ் ஸ்டேஷன் செங் ஊருக்கு (முந்திய செங்கல்பட்டு) வந்து விட்டது. செங்கிலிருந்து 13 மாதத்தில் போய் விடலாம் செவ்வாயிற்கு.




தற்போது சில காலமாய் தெருவில் சேல்ஸ் பண்ண அனுமதி அளித்திருக்கிறார்கள்.

மனிதர்கள் நேருக்கு நேர் பார்ப்பதே குறைவான 10ஜி  நெட்ஒர்க் காலத்தில்  எதிரே வந்த இளைஞனை  நேரே கண் கொண்டு நிரஞ்சன் நோக்க,  சிரித்தான் அவன்.


‘சார் புதுசா  ஒரு காட்ஜெட் வந்திருக்கு. முதல்ல இங்க ரங்காவிலேதான் அறிமுகம்  செய்ய சொல்லியிருக்கு கம்பனி. மிக சின்னதான உள்ளங்கையை விட சிறிய கருவி. 

பேரு “ஓ” என்றான்.



‘ஓ’ தமிழ் எழுத்தா ?  ‘ஆமாம் சார் , 200 வருஷத்துக்கு முந்தி ஓ!பக்கங்கள்  ரொம்ப பிரபலம் தெரியுமோ சார் ? ,எதைப்பத்தியும்  வேண்டுமானாலும் எழுதலாமாம் , அப்போ “ 
 


‘ஆமாம் ,நானும் தாத்தா சொல்ல கேட்டிருக்கேன் ,ஞானின்னு  ஒருத்தர் எழுதுவாராம். பத்திரிக்கைன்னு ஒன்னு அப்போது இருந்தது , வார இதழ் கூட உண்டாம்’ 


எல்லாமே டிஜிட்டல்  ஆகி பல வருடம் ஆகி விட்டது. எந்த மொழி இதழும் சுலபமா படிக்கலாம்.  தற்போது  கொரிய இதழ் ‘கம்சமீதா  ‘  சென்னையில் பிரபலமாகிவிட்டது கொரியாவில் நன்றி என்று அர்த்தம். சென்னையில் ஒரு  பெரிய கொரிய ,ஜப்பான் டௌன் டௌன்கள்  உருவாகி உள்ள காலம்.


இளைஞன் தொடர்ந்து சொன்னான். 


‘சார் இந்த ‘ஓ ‘  ரொம்ப ஆச்சர்யம் நிரம்பியது சார் . 10 ஜி நெட்ஒர்க் இருந்தா  போதும்  ‘ஓ ‘ யை இயக்க  .  இளைஞன்  ‘ ஓ,  ஆன் ‘   என சொல்ல , இருவர் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது  வெர்ச்சுவல் திரை.  திரையில் நடிகை நிவி நிலாவில் இருந்து பேட்டி கொடுத்து கொண்டிருந்தாள் .  அவள் மார்பகம் மட்டும் நீல நிறத்தில்.  ஜெனெடிக் இன்ஜினியரிங் வளர்ச்சி மார்பிற்கு கலர் கொடுத்திருந்தது. அடுத்து நடிக்க இருக்கும் “ஙே”  படத்தில் கோ காதநாயனாக நடிக்க வெளிவரும் படம் பற்றி  பேட்டி. கோ நன்றாக காதல் செய்யும் ஆண்  ரோபோ.  



நிவி, கோ நடன காட்சி ஓடியது இருவர் கண்களுக்கான பிரமாண்ட திரையில் ,அதுவும் இவர்கள் இருவருக்கும் மட்டுமே தெறியும்,கேட்கும்  ஒளி,ஒலி !   திரையில் .கோவின் அட்டகாசமான

நடனத்துக்கு ஈடு கொடுத்து ஆடி இருந்தாள் நிவி  ,பின்னணியாய் பழங்கால 2020 களில் புகழ் பெற்ற  ஹெர்பி ஹேண்கோக் ஜாஸ் பின்னணி  இசை. 


இசை மட்டும் இன்னமும் மாறவில்லை. மனிதர்களின் ரொம்ப போராட்டத்திற்கு பின் இசை துறையில் மட்டும் இன்னமும் செயற்கை நுண்ணறிவு -AI நுழைய அரசு அனுமதிக்கவில்லை .


‘ஓ ‘ வில் உள்ள வசதிகளை அடுக்கிக்கொண்டே போனான் அந்த இளைஞன் .


‘சார்  ‘ஙே’ படம் ரிலீசான உடனே உங்களுக்கு டவுன்லோட்  தானா   ஆயிடும். வீட்டில குடும்பத்தோட பார்க்கலாம். ‘ஓ ‘ கம்பனி,  நாம  நினைக்கறதை செயல்படுத்தற மூளை நியூரான் இணைப்பு ஆராச்சியில ரொம்ப முன்றேயிருக்கு. கூடிய சீக்கிரம் நாம நினைக்கிறதை செயல் படுத்த  ரெடியாயிடும் இந்த ‘ஓ ‘ .  சாப்ட்வேர் மட்டும் அப்போ அப்டேட் செய்தா போறும் சார்.”  மேலும் தொடர்ந்தான் .


‘ஓ ‘ வை யாராலும் ஹேக் செய்யமுடியாது சார். முழுக்க பிளாக் செயின் கண்ட்ரோல் .

உங்கள் மூடுக்கு தகுந்தமாறி உங்க வீட்டையே மாத்திடும்.  கிட்டே ‘ஓ ‘ வை கொண்டு வர ,நிரஞ்சன்


வாசம் பட்டவுடன் “ நீங்க இப்ப ரொமான்டிக் மூட்ல இருக்கீங்க ..உங்களுக்கு 2018 ல இருந்த அந்தக்கால ஸ்ரீதேவி பிடிக்கும் போல’  என்றது ‘ஓ ‘.


நிரஞ்சன் கண்ணுக்கு மட்டுமான  திரையில்  ‘செந்தூரப்பூவே ..’ என ஸ்ரீதேவி திரையில்  பாட  தொடங்கினாள் . 



நிரஞ்சன் அதற்கு ஆச்சர்யப்படவிலை. தனி மனிதனின் ஆசைகள்,விருப்பங்கள்,வெறுப்புகள்,

நடமாட்டங்கள்,பயணம் ,சாப்பாடு ,தூக்கம் இன்ன பிற என அனைத்து  செயல்களுமே  டேட்டாபேஸாக மாறி ரொம்ப காலம் ஆகிவிட்டது. இன்று நிரஞ்சன்  நாலு முறைதான் பாத்ரூம் போனது உட்பட.  பாத்ரூம் பேசின் கூட சிப் சென்சார். மருத்துவமனையோடு நேரடி இணைப்பு. ‘உட்கார்ந்தவுடன் ‘ வாரம்


ஒரு  முறை ரிப்போர்ட் . 


“ உங்க கிட்சன் ,கார்,பிரிட்ஜ், ,ஆர்டிபிசியல்  கருவி, பாத்ரூம்  பேசின் வீட்ல இருக்கிற எல்லா சிப்போடும்  தானா இணைந்து எல்லா வேலையும் தானா செய்திடும் சார்” என் ‘ஓ’  புகழ் பாடினான் இளைஞன்.


‘என்ன விலைப்பா ‘ என்று வினவினான் நிரஞ்சன் .


‘எட்டு லட்சம்’  என்று பதில் சொன்னது   ‘ஓ ‘ வேதான் .  சொல்லியதோடு நிரஞ்சன் கிரெடிட் கார்டு எண்  திரையில் வர ‘நோ ‘  என நிரஞ்சன் சொல்ல. ‘ஆமாம் ,கஷ்டம்தான் நிரஞ்சன். உங்களோட ஒரு வார சம்பளம்.  உங்க மனைவி நிஷாவிற்கு  வேற விலை மதிப்புள்ள புடவை போன வாரம் இங்க ரங்காவிலதான் வாங்கியிருக்கீங்க  ,அதுவே உங்களின் இரண்டு வார சம்பளம்’ என்றது ‘ ஓ ‘.


‘பார்த்தீங்களா சார்  ‘ஓ ‘ திறமை என்றான் அந்த இளைஞ்சன்.


உண்மைதான் நிச்சயம் இந்த ‘ ஓ ‘ 2222 சிறந்த படைப்பாக இருக்கலாம் என்று நினைத்த

நிரஞ்சன்   ‘இல்லப்பா அதான் ‘ஓ ‘ சொல்லிடுச்சே ..என் நிலைமையை ’ 

விடைபெற்று விறு விறுவென நடந்தான் பிரபலமான ‘போ ‘ புடவை கடை நோக்கி.


ரங்காவில் இன்று நிரஞ்சன் நுழைந்ததிற்கு காரணம் அவன் மைத்துனி திருமணம் அடுத்த மாதம் முதல் ஞாயிறு திருமணம். உலகின் சிறந்த வழிமுறைகள் எல்லாம் கணனிகள் ஆராய்ந்து அவையாவும்  அரசுக்கு சட்ட திட்டங்களாக மாற்றும்  கணனி வழிமுறை வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.  திருமணங்கள் ஞாயிறு மட்டுமே என்பது சிறந்த கொரிய வழிமுறை. அலுவலகத்துக்கு திருமணம் சம்பந்தமாக விடுமுறை இல்லை என்பதற்கு வசதியான நடைமுறை.  இது இங்கும் நடை முறையாக மாற்றி விட்டார்கள். 


அதுபோலத்தான் உலகின் சிறந்த திருமண உடை என்பதில் புடவையும்,ரவிக்கையும் என்று ஒன்பதாம் தலைமுறை கணனி சொன்னதால் திருமணத்திற்கு புடவை,ரவிக்கை மட்டுமே பெண்களுக்கு உடை. சென்னை ரங்கா முழுக்க நிறைய புடவை கடைகள் காலம் கடந்தும் இருக்க இந்த கணனி கண்டுபிடித்த விதியே காரணம். 


போன வாரம் ரங்காவிற்கு மனைவி நிஷா உடன் வந்த நிரஞ்சன் புடவை எடுக்க வந்திருந்தான். புடவை எடுத்து முடிப்பதற்குள் ரங்காவில் இருக்க  அனுமதி நேரம்  முடிந்து விட்டது. எனவே நிரஞ்சன் மனைவி நிஷா  புடவை விவரங்களை ,கைபேசி சிப்பில் திணித்து அனுப்பியிருந்தாள் இந்த வாரம். 


புடவை கடையில் கூட்டமில்லை. நேரே ரவிக்கை பகுதிக்கு சென்றவுடன் கைபேசி தகவல் கடை கணனிக்கு மாறியது. கணனி திரை.,’சாரி உங்க புடவைக்கு மேட்ச்சான ஜாக்கெட் பீஸ் இல்ல ‘  அடுத்து அதுவே இன்னொரு கேள்வி கேட்டது ‘ரங்கா முழுக்க தேடிடவா ?”


‘ ஆம்’  பட்டனை தட்டினான் நிரஞ்சன். 


சில நொடிகளில் ‘சாரி  உங்க புடவைக்கு மேட்ச் ரங்காவில எங்கேயும் இல்ல .வேணா ஆர்டர் செய்யவா அடுத்த வாரம் வரும் ‘  என வினவியது கடை கணனி . பதில் தராமல் திரும்பினான்.


மனைவியோடு அடுத்த வாரம் திரும்ப வந்து பார்ப்போம். அவள் ஏதாவது யோசனை தரலாம். 

கணனி சர்ச் அவளே செய்யட்டும் என நினைத்து திரும்பினான்.


ரங்காவில் திரும்ப எஸ்கேலேட்டரில் திரும்ப  ,எதிரே அதே இளைஞன் .


‘சார் ‘ஓ ‘ வேணாமா சார். ‘ என்றான்.


சற்றே யோசித்த நிரஞ்சன் ‘ஓ ‘ எனக்கு உதவினா வாங்கிக்கிறேன்.’ என்றான் 


“என்ன சார் ‘ ஓ’ மூலமா வேணும்.?” 


“என் மனைவி புடவைக்கு ஒரு மேட்ச் ஜாக்கெட் பீஸ் இருக்கிற இடம் தெரியணும்  “


நிரஞ்சன் குரல் கேட்டவுடன்,அவன் குரலை உணர்ந்த ‘ஓ ‘  அவனது கைபேசியோடு தானாக இணைந்து  திரையில் பளிச்சிட்டது. 


‘நிரஞ்சன் உங்களுக்கு தேவையான ஜாக்கெட் பீஸ் இங்க ரங்காவில  இல்ல , ஆனா  சென்னை பந்   தெருவில் வோல்சேல் கடையில இருக்கு ,ஆர்டர் செய்திட்டேன் ,நீங்க வீட்டுக்கு போறதுக்குள்ள எக்ஸ்பிரஸ் டெலிவரி ஆயிடும்.  இப்ப ‘ ஓ ‘ வேணுமா ,

வேணாமா ?’ செல்லுங்க என்றது  ‘ஓ ‘ .  


‘நிச்சயம் வேணும்’ என்றான் நிரஞ்சன் . எட்டு லட்சம் டெபிட் , கிரெடிட் கார்டு செய்தியுடன்   ‘ஓ ‘ இடம் மாறி நிரஞ்சன் சட்டைப்பைக்குள் செல்ல கைபேசியை  முதலில் டம்மியாக்கியது.  ‘ஓ’  வில் இருந்து அழகிய  பெண் குரல் நிரஞ்சன் காதில் ஒலித்தது.


‘சீக்கிரம் நடங்க  நிரஞ்சன் . உங்க ரங்கா  அனுமதி நேரம் இன்னும்  அஞ்சு நிமிஷம்தான். அப்புறம் நானே அரசுக்கு உங்க சார்பா  பைன்  எடுத்துடுவேன் ‘  என்றது ‘ஓ’.


‘ஓ ‘ சொல்படிதான் எல்லாம் இனி. வேகமாக ரங்காவை  கடக்க தொடங்க ,சுதந்திரமான எள்ளுத்தாத்தா கணபதி நினைவு  வர,நிரஞ்சன்  விழி ஓரங்களில் கண்ணீர் ! அவனது எண்ண ஓட்டத்தை  உணர்ந்தது ‘ஓ! ‘  கணபதி தாத்தாவிற்கு பிடித்த , திரையில்1960 வந்த சினிமா 


-சந்திரபாபு  பாடினார்  அவனது கண் எதிரே வெர்ச்சுவல் திரையில் :
 


“பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்

முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்

இரவின் கண்ணீர் பனித்துளி என்றார்

முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்





இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்

மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் !” 















கருத்துகள்

  1. நல்ல கற்பனை. எதிர்காலம் எப்படி தொழில்நுட்ப வளர்ச்சிப்பெறும் என்பதை உங்கள் கற்பனையில் வெளிப்பாட்டில் தெரிகிறது. இதுபோன்ற அறிவியல் புதினக்கதைகளைத் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக