சில மழை மேகங்கள் ….

 சில மழை மேகங்கள் ….


-திருவருணை சிவசு 


நிரஞ்சனுக்கு கல்யாணம். இன்னும் நான்கு மாதம்  இருக்கிறது. நிரஞ்சன் அம்மா கோதை  எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தாள். நிரஞ்சனோடு ஒரு அக்கா ,ஒரு தங்கை ,நிரஞ்சன் தவிர இருவருக்கும்  திருமணம்  ஆகி     செட்டில் ஆகியாயிற்று. நிரஞ்சன் மட்டும் சென்னையில் 

ஐ .டி. நிறுவனத்தில் சிஸ்டம் அனலிஸ்ட் வேலை.


நிரஞ்சன் அம்மாவிடம் எத்தனையோ முறை சொல்லிவிட்டான் . அம்மா கேட்ட பாடில்லை. ஒரே காரணத்தைத்தான் திரும்ப திரும்ப சொன்னாள்  ‘ஒரே பையன் ,இதுதான் நம்ம வீட்டில் கடைசி கல்யாணம் வேற . ஜாம் ஜாம்னு நடத்தணும். நீயும் நல்லா  கை  நிறைய  சம்பாதிக்கிறே, நாம்பளும் மேல்தட்டு காரங்கதானடா ,அப்புறம் என்ன?”



‘அம்மா சமீபத்தில ஒரு நண்பனோட கல்யாணத்துக்கு போனேன் எவ்வளவு சிம்பிள் தெரியுமா?’ 


‘சிங்கிள் டிஷ்  மேரேஜ்’ ,அப்படின்னு  கல்யாண அழைப்பிதழ்ல கூட போட்டிருந்தான்’ 

‘அதென்னடா சிங்கள் டிஷ் மேரேஜ் ‘? என்றாள்  அம்மா . 

‘ஒரே வேளை  கல்யாணம் ,சம்பிரதாயம்  எல்லாம் உண்டு. ஆனா ஒரே டிஷ். சைவ பிரியாணி மட்டும்தான் .உருளைக்கிழங்கு சிப்ஸ்  மட்டும் கூட. சூப்பர் டேஸ்ட், ஒரு நல்ல செஃப் ஏற்பாடு ,தரம் கூட ‘


‘போடா போக்கத்தவனே , நாம  என்ன அப்படி என்ன வக்கத்து  போயிட்டோம் ?  23 வகை  சொல்லியாச்சி  பெண் வீட்ல , கொரோனா கட்டுக்குள்ள வந்தவுடனே  கல்யாணம் வைச்சதே தடல்புடலா  கல்யாணம் பண்ணத்தான்  ‘ என்றாள்  கோதை. கூடவே சகோதரிகள் ‘ஏன்டா எங்களை ஏமாத்த  பார்க்கறே ‘  கண்டிப்பாக  10,000 ரூபாயில்  புடவை வாங்கித்தருவேன்னு என் வீட்டுக்காரர்கிட்ட பந்தயம் கட்டியிருக்கேன்,மேட்சா பட்டுல மாஸ்க் கூட வாங்கணும்  ‘ என்றாள் 

இவர்களுக்கு புரியாது என்று விட்டுவிட்டான் நிரஞ்சன்.



சகோதிரிகளுடன் ஒரு பெரிய பட்டியலுடன் சென்னை வந்திருந்தாள் நிரஞ்சன்  அம்மா.

‘நாளைக்கு  காத்தாலே ரங்கநாதன் தெரு போறோம். அங்க ரெண்டு பேமஸ் கடையில ஜவுளி எடுக்கிறோம். கணக்கு பார்த்தா 43 புடவை  வருது’  என்றாள் அம்மா.

கோதை சுற்றத்தினரை  நான்காய்  தரம் பிரித்து இருந்தாள். சுற்றத்தில் ஏது தரம் ? 

எல்லா புடவைகளையும்  வாங்கியாயிற்று.


‘என்னம்மா எல்லா புடவைக்கும் மேட்சிங் ரவிக்கையை  இங்கேயே வாங்கிக்கீங்களேன் ‘  என்றார்  புடவைகளை எடுத்த போட்ட சேல்ஸ் மேன். புடவைகள் விற்ற களிப்பும்,களைப்பும் சேர்ந்து இருந்தது  அவர் முகத்தில்.


அம்மா கண் ஜாடை காட்டினாள். ‘இங்க வேணாம் .எல்லா புடவையிலும் ரவிக்கை இருக்கு. சும்மா ஒப்புக்கு ஒத்த  துணியா  கொடுக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. மேட்சிங்  ரவிக்கை கடைக்கு  போகலாம் ‘ என்றாள் .  அம்மாவின் இந்த கணக்கு புரியவில்லை நிரஞ்சனுக்கு .இது பெண்கள் விஷயம் ரொம்ப தலையிட்டால் அம்மா கோபிக்கலாம். ‘சரி ‘  என தலையாட்டினான்.


நால்வருக்கும்  ஆளுக்கு பத்து பைகள். நிரஞ்சனிடம் பதிமூணு .‘உன்கிட்ட பதிமூணு பை  இருக்கு நிரஞ்சன் ,புடவை பை கணக்கு ஜாக்கிரதை.’ என்றாள்  அம்மா.


சின்னதான  அந்த ரங்கநாதன் தெரு  ரவிக்கை கடைக்கு போனார்கள் அனைவரும் . ஒரு சின்ன பையனும் ,ஒரு சேல்ஸ் பெண் மட்டுமே.சேல்ஸ் பெண் பார்க்க ரொம்ப எளிமை.


ஒரு கவர்ச்சி  கண்களில் தெரிந்தது . எளிய பருத்தி  புடவை. வெயிலுக்கும் ,அந்த  சின்ன கடையின் புழுக்கத்திற்கும் ஏற்றதாக  இருக்கலாம்.



ஒவ்வொன்றாக  அழகாக சரியான மேட்சிங் கலரில் ரவிக்கை துண்டுகளை  எடுத்து தந்தாள்.

‘யாருக்குமா  கல்யாணம் ?”  சிரித்துக்கொண்டே கேட்டவிதம் பிடித்திருந்தது.

“ இவனுக்குதாமா “  என்றாள்   ஒரு சகோதரி.





‘எல்லா  புடவைகளும் சூப்பர் மேடம் ,நல்ல செலக்சன் .  பொண்ணுக்கு  எடுத்திருக்கிற அந்த அரக்கு  கலர் புடை ரொம்ப சூப்பர்  மேடம்’  என்றாள் . ஒரு புடவையை  மட்டும் திரும்ப திரும்ப பார்த்தாள்  கைவைத்து ,விளைய பட்டியல் உட்பட . ஒரு வேலை  மேட்சிங் இல்லையோ? என யோசித்தான் நிரஞ்சன். ஆனால்  அப்படி தெரியவில்லை.


புடவை விலையை திரும்ப பார்த்தாள் . ‘ இது ரொம்ப நல்லா  இருக்கு மேடம்  ,காட்டன் போல வெரி சிம்பிள் அண்ட்  நைஸ் மேடம்  ‘ஆங்கிலம் அருமை .நான்காவது  சுற்று தூரத்து உறவு பெண்ணிற்கு வாங்கியது. ஐநூறு தான்  விலை,  வாங்கினதில்   அதுதான் விலை கம்மியாக  இருந்தது .  ஆச்சர்யம்   நிரஞ்சனுக்கு. எதற்கு இவள்  இப்படி இந்த புடவையை திரும்ப திரும்ப பார்க்கணும்? ஒருவேளை அவளுக்கு பருத்தி சேலைகள் பிடிக்குமோ ?, என நினைத்தான்.


எல்லாவற்றையும் அந்த பெண்  அழகாக பேக் செய்து  ஒரு பையில் போட்டபோதுதான்  கவனித்தான்  அவள் கட்டியருந்த புடவையின் தலைப்பில்  ஒரு கிழிசல். அதை அவள் நாசூக்காய் மறைத்திருந்தாள் . பார்க்க பாவமாய் இருந்தது நிரஞ்சனுக்கு. அவள் புது புடவை வாங்க விரும்பலாம், அதற்காகத்தான் அந்த புடவையின் விலைப்பட்டியலை திரும்ப திரும்ப  பார்தோளோ?


கடையை விட்டு கிளம்பும்முன் ‘ திருமண வாழ்க்கை மிக சிறப்பாக அமையட்டும் சார்’ என்றாள் ஆங்கிலத்தில். 

.


கடையை விட்டு கிளம்புமுன் அம்மா கேட்டாள் .“ உன்கிட்ட  பதிமூணு பை இருக்கா ?  ‘ஆமாம் ‘   உண்மையில்  பன்னிரண்டுதான்  இருந்தது நிரஞ்சனுக்கு தெரியும். எல்லா ரவிக்கைகளும்  வாங்கியபின் கடையை விட்டு கிளப்புமுன்,அந்த பெண் திரும்ப திரும்ப பார்த்த  புடவையை கடையிலே விட்டுவிட்டான் நிரஞ்சன்,பாவம் எடுத்துக்கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் .



அனைவர் முகத்திலும் பசியும்,களைப்பும். எதிரே இருந்த  உயர் தர சைவ உணவு  விடுதியில் அனைவரும் ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்திருக்க,வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்த 



அந்த சேல்ஸ் பெண் நேரே நிரஞ்சனிடம்  வந்தாள் .‘தேங்  காட் , நீங்கள் கிளம்பி போகறச்சே , ,பசியும் களைப்பு  தெரிஞ்சுது சார் உங்க முகத்திலே. இங்கதான்  வந்திருப்பீங்கன்னு  ஒரு யூகம் ,  நீங்க  ஒரு புடவை பையை  கடையிலே விட்டுட்டு  விட்டு வந்தீட்டீங்க . இந்தாங்க சார் அந்த பை ‘  அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. 


பதிலுக்கு காத்திராமல் விடுவிடுவென கிளம்பிவிட்டாள்.


வானில் கருமேகங்கள் சூழ தொடங்கியது.


‘என்ன நிரஞ்சன் தப்பாய் கணக்கு பண்ணிட்டயா ? 

 வானில் கருமேகங்கள் .









‘ என்னமோ தீடிர்னு மழை  வேற ,சீக்கிரம் சாப்பிடுங்க மழைக்கு முன் ஊர் போய்  சேரனும் ‘  என்றாள்  கோதை.



மழைமேகங்களை  இதுபோன்ற நேர்மையான தேவதைகள்தான் வரவழைக்கிறார்கள்  என்ற நினைப்போடு நடந்தான் நிரஞ்சன் *

















கருத்துகள்




  1. பலே, அருமையான நடை. அந்தப் பெண் மனதை தொட்டுவிட்டாள். ஏன் அந்தப் புடவையை திரும்பத்திரும்ப பார்த்தாள் என்று தெரியாமல் மறைத்தது அருமை

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக