மெய்ப்பொருள் …
திருவண்ணாமலை. ரமணாஷ்ரமம். பாராயண பஜனை நேரம் .ரமணரின் சன்னதி முன்னே ஆண்களும்,பெண்களும் தனித்தனி நேரெதிர் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். சரியாக மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் பாராயணம். ஞாயிறு தவிர மற்ற ஆறு நாளும் அனுதினமும் ஒரு மணி நேர பாராயண பாடல்கள் பாடப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் தொகுப்பு. பெரும்பாலும் ரமணரின் கைப்பட எழுதியவை. பெண்கள் ஒரு வரியும் பின் ஆண்கள் ஒரு வரியும் என பாடுவது ஒரு ஒழுங்கு.
பெண்கள் வரிசையில் வினோதினி டீச்சர். டீச்சர் என்றோ ,மிக நெருங்கியவர்கள் “டிராவல் மாமி”
என்றோ அழைப்பதுண்டு. பளிச்சென்ற பருத்தி சேலை கட்டியிருந்ததில் ஒரு மிடுக்கு ,காதிலும்,மூக்கிலும் மின்னும் வைரங்கள் மாமியின் செழுமையை காட்டினாலும் ,தெளிவான முகத்தில்
கர்வம் இல்லை, ஒரு தெளிவு இருந்தது.
மாமிக்கு நேரெதிரே அவரது கணவர் பரசுராமன் ,நெற்றியில் இட்ட சரியான மூன்று விபூதி கீற்றுகள் ,எப்போதும் புன்னகை தவழும் முகம். எதிர் வருபவர் யாராக இருந்தாலும் நெஞ்சில் இரு கரம் வைத்து “அருணாச்சலம்” என்று பரசுராமன் சொல்லும் அழகில் பதிலுக்கு புன்னகையை விதைக்காதவர்கள் இருக்க முடியாது .
புன்னகையுடன் மனிதர்கள் அபூர்வமாகி விட்டார்கள். பன்னிரண்டு வருட ரமணரின் பந்தம்
வினோதினி ,பரசுராமன் தம்பதிக்கு மனதில் தெளிவு தந்திருக்கலாம். மனத்தெளிவுதானே முகத்தில் பிரதிபலிக்கும். பிரதிபலிப்பு உள்ளிருந்து வருவதால் ஒரு கூடுதல் தெளிவு முகத்தில் இருவருக்கும்.
வினோதினி டீச்சர் கல்பாக்கம் ஒட்டிய சதுரங்க பட்டினத்தில் அரசு உயர் நிலை பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தவர். .இரசாயன முதுகலை படிப்பு. தலைமை ஆசிரியராக ஓய்வு.
படிப்பு என்பது வெறும் ஏடுகளில் இல்லை என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவள் வினோதினி .தனக்கு தெரிந்த எல்லாம் மாணவர்களுக்கு சொல்வதில் கை தேர்ந்தவர். ஆசிரியர் இல்லாத வகுப்புகளுக்கு வளிய சென்று மாணவர்களுடன் அளவுலாவுவது விருப்பம். விருப்ப ஒய்வு பெற்றாலும், காசு கொடுக்காமல் வாங்கிய நல்லாசிரியர் விருது அதற்க்கு சான்று.
பரசுராமன் கல்பாக்கம் அணு ஆராச்சி நிலையத்தில் தலைமை விஞ்சானி. விநோதினி ,பரசுராமணனுக்கு ஒரே மகன் ஈஸ்வர்.
‘சந்ததிக்கு அழகு உவந்து செய்யாமை’ . சொல்லித்தருவதில் மட்டுமல்ல வாழ்வில் கடை பிடிப்பவள் வினோதினி. ஒரே மகன் என்பதர்க்கு விழுந்து விழுந்து எதுவும் செய்யவில்லை. கேட்டதெல்லாம் வாங்கி தரவில்லை. தேவைக்கு அதிகம் எதுவும் செலவு செய்யாத குணம்.. இந்த விதி பயண திட்டங்களுக்கு மட்டும் பொருந்தாது . எங்கு வேண்டுமாலும் போ என்பார்கள் இருவரும் . பதினான்கு வயதில் தாய்லாந்து தனியே சென்றிருக்கிறான் ஈஸ்வர்.
ஈஸ்வருக்கும் பிடித்தது அது. ‘நான் பார்த்துகிறேன்’ என்பான். படிப்பு அவன் விருப்ப படியே .
விவேகனந்தாவில் பிகாம் ,பின் மூன்று வருடம் வேலை சென்னை பங்கு வர்த்தக நிறுவனத்தில்.
ஈஸ்வர் மிக தெளிவான பாதையை வகுத்து கொள்வதில் திடமாக இருந்தான். வேலைக்கு பின் ஹார்வார்டில் எம் பி ஏ , வர்த்தக நிற்வாகத்தில். சேர்ந்த முதல் வருடமே பல்கலை பண உதவி
உதவி ஆசிரியர் வேலை. பின் முடித்தவுடன் நியூயார்க் வால் ஸ்ட்ரீட் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை.
பங்கு வர்த்தக நிறுவனத்தில் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில். வால்ஸ்ட்ரீட் ஜெர்னலில் வரும் ஈஸ்வரின் பங்கு வர்த்தக சிபாரிசுகளை பாராட்டாதவர் இல்லை.
பாராயணம் வரும் மாமிகளில் சிலர் வம்பும் உண்டு. ‘ஈஸ்வர் என்ன சம்பளம் வாங்கறான் டீச்சர் ? ,உலக முழுக்க போறிங்களேன்னு கேட்டேன்’ என்பவருக்கு ‘ நல்ல சம்பளம் ,நல்ல
வேலை ‘ என்பதாகவே இருக்கும் பதில். உண்மையில் ஈஸ்வர் வால்ல்ஸ்ட்ரீட் நிதி நிறுவனத்தில் CRO வேலை. சீப் ரிஸ்க் ஆபிசர் வேலை. ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலருக்கு மேல் சம்பளம்.
2008 வருட உலக பங்கு சந்தை சரிவின் போது கூட ஈஸ்வரின் பரிந்துரைகள் தோற்க்கவில்லை என்பதே அதிக சம்பள காரணம். டிரம்ப் கால கட்டத்தில் இரண்டு கத்திகள் மேல் ஒரே நேரத்தில் நடப்பது போல் உள்ளது என்றான் ஈஸ்வர் கடந்த வீடியோ சாட்டில் தந்தையிடம்.
ஈஸ்வர்தான் இருவரையும் வலுக்கட்டாயமாக கட்டாய ஒய்வு பெற சொல்லி வற்புறுத்தினான்.
வினோதினி திருவண்ணாமலை சார்ந்தவர். தந்தை விட்டு சென்ற ஒரு கிரௌண்ட் இடத்தில வீட்டை
கட்டிக்கொண்டாள். ஆஸ்ரமத்துக்கு அருகாமை இடம். பக்கத்து பங்களாவில்தான் யோகி சூரத் குமார். தம்பதியர் பாராயண கூட்டத்துக்கு செல்பவர் என தெரியும். .சில நேரங்களில் வீட்டிற்கு வரச்சொல்லி பாராயண பாடல்களை கேட்டதுண்டு . ரமணரோ ,ராம்சூரத்தோ சாமியார்களுக்குள் ஏது பேதம்?
வினோதினி குடும்ப முழுக்கமே பயணம் பிடிக்கும். வருடாந்தர பட்ஜெட்டில் ஐந்து சதவீதமாக இருந்த பயண பட்ஜெட் 20 சதவீதம் வரை வந்து விட்டது . பயணங்கள் மூவருக்குமே பிடித்தது பயணங்களை போல படிப்பினை வேறில்லை. விமானமோ ,ரயிலோ,காரோ போகும் இடம் எதுவானாலும் வித விதமான மனிதர்கள் ,புதிய இடங்கள். புது தெம்பு வந்து விடும் ஒவ்வொரு பயணத்துக்கு பின்னும்.
“ உழைச்சது போதும்,நம்ம அனைவருக்குமே ஒரு பிடிச்ச காரியம் இருக்கு. ஒரு கால கட்டத்துக்கு மேலே பிடிச்சதை செய்யனும். இதுவரைக்கும் நாம நிறய பயணம் பட்டிருக்கோம். இருந்தாலும் உலகம் பெருசு. முடிச்ச போதெல்லாம் உலகம் சுற்றி வாங்க. பணம் இருக்குதுன்னு இத நான் சொல்லலை
உங்களுக்கு பிடிச்சதை செய்யுங்கன்னு சொல்றேன். “ என்றான் ஈஸ்வர் .
சொன்னதோடு நில்லாமல் சென்ற முறை குடும்பத்துடன் வந்த போது ஒரு ட்ராவல் கிட் வாங்கி வந்திருந்தான்.அதில் ஒரு சின்ன குக்கர் ,காபி மேக்கர் ,சிறு அறைகள் கொண்ட பகுதி,அரிசி வைக்க கூட ஒரு இடம். ஒரு முறை எடுத்து சென்றால் இருபது நாள் வரும் அளவு இருந்தது அந்த குறுகிய பெட்டி.
ஈஸ்வர் எல்லா ஏற்பாடுகளும் செய்து விடுவான். குறைந்தது பத்து நாள். குறை ஒன்றும் இருக்காது.
அவ்வப்போது ஈஸ்வரனின் அமெரிக்கா காரியதரிசி வேறு மிக நேர்த்தியாக செய்த பயண திட்டத்தில்
குளறுபடிகள் உண்டா என்பாள் . ஈஸ்வரனோடு அவளும் எல்லாம் சரியாய் போகிறதா என வினவுவாள் மின் அஞ்சலில்.
பார்க்காத இடமில்லை ,பயண படாத தேசம் இல்லை.ஏழு கண்டங்கள் ,புதிய,பழய உலக அதிசயங்கள். கனடா பகுதி நாயகராவும், சாம்பியா ,ஜிம்பாபே இடையே விக்டோரியா நீர் வீழ்ச்சி,கென்யாவின் மிக பெரிய விலங்குகள் இடப்பெயர்ச்சி ,ஆறுமாத தொடர் சூரியன் ஐஸ்லேண்டிலும் ,இரவு சூரியன் நார்வேயிலும் ,ஆர்டிக் வானத்தில் சூரியனின் பஞ்ச வர்ண லீலைகளையும் ,கைலாயத்தில் சூரியன் பட்டு பொன்னிறமான சிவனையும் பார்த்தாயிற்று.
இருவருமே மூன்று முறை ஜம்போ பாஸ்போர்ட்டை மாற்றியாகிவிட்டது.
சில பயணங்களில் ஈஸ்வர் குழந்தைகளுடன் சேர்ந்து கொள்வதுண்டு . துருக்கி ஹாஜியா சோபியாவும், எகிப்து பின் அப்படியே சஹாரா பாலை வனத்தில் ஜனவரி குளிரில் மிக பெரிய டென்டில் இருந்தது பேரானந்தம் இருவருக்கும்.
பெற்றோர்கள் கட்டளையிடாமலேயே அவர்கள் குறிப்பறிந்து செய்யும் பிள்ளகைள் ஒரு வரம். ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என வினோதினி மாணவர்களுக்கு பல முறை சொல்லியிருக்கிறாள்.
ஏவா மகன் ஒரு வரம். எப்போதும் அதற்கு அண்ணாமலையை சுற்றி நன்றி சொல்ல தயங்கியதில்லை இருவரும். இதுவரை , பயணங்களில் குறை ஏதும் இருந்ததில்லை . அந்த காலத்தில் பாராயணம் கலந்து கொள்ளாதது மட்டுமே குறை.
இதோ பாராயணம் முடிந்து விட்டது . வீட்டிற்கு நுழைந்ததுமே ஈஸ்வர் வீடியோ அழைப்பு. முடிந்தவரை முன்னிரவில் இருக்கும் அழைப்பு.
‘ஹலோ அம்மா, அப்பா ..எட்டு மாசம் ஆச்சு நீங்க வெளியே சென்று. இன்னும் பார்க்காத அனுபவிக்காத ஒன்னு இருக்கு. செகரட்டரி கிட்ட சொல்லியிருக்கேன். ஸ்பெயின் பார்சிலோனா இடம். ‘
‘சொல்லு கண்ணா’ என்றால் வினோதினி.
‘ ரொம்ப நல்ல சிட்டி. அங்கிருந்து ஒரு பெரிய சொகுசு கப்பல் ரோமுக்கு போகுது . வழியில ஒவொரு இடமா பார்க்கலாம். கடைசியா ரோம் போகும் அங்கிருந்து சென்னை போயிடலாம் பைவ ஸ்டார் கப்பல் . விசாரிச்சிட்டேன் இந்தியன் சாப்பாடு ஏற்பாடு செய்திடலாம் . நாளைக்கு சொல்லுங்க உங்க முடிவை. அப்பா உடம்பு பார்த்து சொல்லுங்க .இன்னிக்கு எல்லா விவரமும் செக்ரட்டரியை விசாரிக்க சொல்றேன்.
பரசுராமன் கண்ணில் தெரிந்த கேள்வி ஈஸ்வருக்கு புரிந்தது.
“ஒன்னும் பெரிய தொகை இல்லப்பா ஒரு 30,000 டாலர் மொத்தமா ஆகும். இந்த முறை நிச்சயம் நல்ல இன்சென்டிவ் உண்டு எனக்கு . மார்க்கெட் நல்லா இருக்கு , டிரம்ப் ஷூட்டிங் பிரச்சனையை தவிர, ஒரு கிளைண்ட்ட பார்க்க மண் ஹாட்டன் போகணும், பெரிய ஆள் என்னோட போர்ட்போலியல வந்துட்டா நிச்சயமா 50,000 டாலர் கமிஷன் நிச்சயம்’ என்றான் .
’ ரொம்ப சந்தோசம் ஈஸ்வர் நாளைக்கு பேசறோம்’ என்றனர் இருவரும் கூட்டாக.
வாசலில் யாரோ கேட் திறக்கும் சத்தம் கேட்டது.
எட்டி பார்த்து “ அட வாங்க, வாங்க கோவிந்தராஜன் எப்படி இருங்கீங்க ?. ஆச்சர்யம் பொண்ணு கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்க வந்தீங்க கடைசியா “ என்றாள் வினோதினி.
கோவிந்தராஜன் கடைசியாக வேலை பார்த்த சதுரங்க பட்டினத்து உயர் நிலை பள்ளிக்கூட பியூன்
ரொம்ப நேர்மையான சிப்பந்தி. கூடவே அவர் மகன் தருமர் வந்திருந்தான்.
“அட வாப்பா தருமர்.பிளஸ் டூ என்ன மார்க் ? “
“ஸ்கூல் பர்ஸ்ட் டீச்சர் .1121 “ என்றான்.
விநோதினிதான் ,ஆரம்ப பள்ளிக்கூடத்தில் இருந்து உயர் நிலை பள்ளிக்கு சேர்க்கும்போது தருமன் என்ற பெயரை தருமர் என மாற்றி சேர்த்தாள் . “ பேர்ல ஒரு கம்பீரம் இருக்கனும் ” என்றாள்
“எங்க உன் பெயர் தருமர் சொல்லுன்னு “ சொன்ன உடனே தருமர் என்று கம்மீரமாக சொன்னது நினைவு வந்தது.
“இருங்க சாப்பிடலாம் முதல்ல. “ என்றாள்.
‘ஒண்ணுமில்ல டீச்சர் ,இப்பதான் பொண்ணு கல்யாணம் , போன வருஷம் பி எப் லோன் போட்டு முடிச்சேன். உங்களுக்கு தெரியாதது என்ன டீச்சர். தருமர் திருக்கழுகுன்றத்தில் பாலி டெக்கினிக்ல படி ,வீட்டில இருந்து போயிக்கலாம்னு சொல்றேன். கேட்க மாட்டேங்கிறான் “
“சென்னையில நல்ல என்ஜினீரிங் காலேஜ் கிடைக்கும், ஹாஸ்டல்ல சேர்வென்னு சொல்றான் . என்ன பண்றதுன்னு புரியல “
“ உங்களுக்குத்தான் தெரியுமே பிரச்சனைன்னு வந்துட்டா இங்க வந்து கிரிவலம் வந்துடுவேன்ன்னேனு. எல்லாம் நீங்க சொன்னதுதானே டீச்சர் பார்ப்போம் அண்ணாமலை ஏதாவது
காட்டாமலா போயிடுவார் “ என்றார் கோவிந்தராஜன்.
“அப்பாவை கஷ்ட படுத்தணும்னு இல்ல டீச்சர். லோன் போட்டு படிக்கலாம்னு ஆசை “ என்றான் தருமர். ஆனா உங்களுக்கு அப்பறம் யாரும் சூரிட்டி தறதில்ல டீச்சர் “ என்றார் கோவிந்தராஜன்.
“நிச்சயம் வழி பிறக்கும் தருமர். முதல்ல மலை சுத்திட்டு வாங்க “ என்றாள்.
அவர்கள் அந்த பக்கம் போனதும் பரசுராமரின் தோல் மேல் கை போட்டாள், அப்படியெனில் ஏதோ முக்கிய விஷயம் என அவருக்கு தெரியும் . ஆலோசனை முடிந்தது.
.
“ சரி, ஈஸ்வ்ருக்கு நீயே மெயில் அனுப்பு “ என்றார் . அவரது கண்களில் தோழமை தெரிந்தது.
கிடு கிடுவென வினோதினி டைப் செய்தாள் இதுபோன்ற தருணங்களில் தமிழ்தான் வரும் அவளுக்கு
“அன்பு ஈஸ்வர்,
உன் செக்கரடிரி அனுப்புன இ-மெயில் பார்த்தேன். பார்சிலோனா விவரமும், ஹார்மனி ஆப் தி சீஸ்
என்ற சொகுசு கப்பல் பயண விவரமும். அந்த கப்பல் ஈபில் டவர் போல உயரம் என கூடுதல் தகவல் தந்திருக்கிறாள் 35,000 டாலர் ஆகும் போல இருவருக்கு.
ஈஸ்வர் , உனக்கு தெரியாததை ஏதுமில்லை. உலகம் முழுக்க போயாச்சு நாங்க . ஆடம்பரமான இந்த கப்பல் பயணம் நிச்சயம் எங்களுக்கு ஆனந்தம் தரும்தான். அதற்கு மேல் ஒரு ஆனந்தம் இருவருக்கும் கிடைக்கும் என்றால் நீ மறுக்க மாட்டாய் என தெரியும். உனக்கு தெரியும் தருமர் பற்றி நம்ம ஸ்கூல் பியூன் மகன் பிளஸ் டூவில ரொம்ப நல்ல மார்க். இன்ஜினியரிங் பண்ண பணம் இல்ல.எங்களுக்கு அந்த பயண திட்ட பணத்தை அனுப்பு. இனிமே சுத்த வேண்டாம்னு தோணுது.உனக்கு சொல்லியிருக்கேன். கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி. சின்னதா நானும் அப்பாவும் ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கிறோம் . பேர் “மெய்ப்பொருள்”.
இன்னும் இங்க கல்வி எட்டா கனியா இருக்கு ஈஸ்வர். பிச்சை எடுத்தாவது படிக்கணும்னு நான் சொல்லி கொடுத்தது நிஜம்மா இருக்கு இங்க. களவு போகாத செல்வம் ஒன்னு இருக்கு அது கல்வி.
அதை மற்றவனுக்கு தந்தா பலன் அதிகம். ஒரு குடும்பமே தலையெடுக்கும்.
உன்னால முடிந்தவரை உதவு. வீட்டை எங்களுக்கு அப்புறம் ஆஸ்ரமத்துக்கு தர்றதா இருந்தேன். அது இனிமே ‘மெய்ப்பொருள் ‘ டிரஸ்ட்டிற்கு போகணும்னு விரும்பறேன்.
எங்கள் பயணம் முடியாது .இனி நிறய தேவை இருக்கிற ,நல்ல படிக்கிற பசங்களை தேடி போக போறம். நிச்சயம் அந்த பயணங்கள் நிறைய சுகத்தை தரும் ஈஸ்வர். டிரஸ்ட் மூலமா முதன் முதலா தருமருக்கு முழுக்க உதவ எண்ணம். ஆசிகள் ‘ என முடித்திருந்தாள் அடுத்த இரண்டு மணியில் பதில் அனுப்பியிருந்தான் மகன்.
“அம்மா மன்ஹாட்டன் கிளைன்ட் சம்மதிச்சிட்டார் .உங்க பயண பணத்தோட,சேர்த்து 40,000 டாலர் அனுப்பி இருக்கேன். மெய்ப்பொருள் வளரட்டும் , நிச்சயம் வளரும் அம்மா நாளை காலையில் விரிவா பேசலாம் ,இன்னிக்கு முடிஞ்சா நம்ம ஆடிட்டரிடமும் பேசறேன்.”
அடுத்த ஒரு மணிக்குள் வினோதினி வாங்கி கணக்கிற்க்கு 2,48 கோடி வரவு வந்திருந்த குறுந்தகவல் .
மறுநாள் பாராயணம். அருணாச்சல அட்சர மணமாலை இன்று. ரமணர் எழுதியது
வினோதினியின் கையில் ஐபாட் .
‘ஊர்சுற்றுளம் விடாது உனை கண்டு அடங்கிட , உன் அழகை காட்டு அருணாசலா ‘
என்ற வரி.
எத்தனை ஊர் போனால் என்ன? உன் அழகிற்கு இணை ஏது அருணாச்சலம் ‘
அர்த்தம் புரிந்த பரசுராமன் அந்த வரி பாடும்போது விநோதினியை பார்த்தார் . கண்ணில் இருந்து வந்த ஒரு சொட்டு கண்ணீர் ஐபாட் வழியே வழிந்ததை , புடவை தலைப்பால் துடைத்து கொண்டாள்
வினோதினி.
பாராயணம் முடிந்து வெளியே வந்து நேர் எதிரே பார்த்தனர் இருவரும். அண்ணாமலை மவுன குருவாய் தெரிந்தார் *
கருத்துகள்
கருத்துரையிடுக