பித்ரு

-சிவசு 

பித்ரு -குமுதம் இதழில் 01-02-1993 வட ஆற்காடு மாவட்ட சிறுகதை போட்டியில் முதல்  பரிசு பெற்ற கதை !


ஆஸ்ரமம் வீட்டை விட்டு அப்பா வருவதாக எழுதிவிட்டார். அப்பாவின் கடிதங்கள் எப்போதும் ஒரு  புதுக்கவிதையாய் இருக்கும். ஆஸ்ரமம் லைப்ரரியில் வந்துள்ள புதிய புத்தகம் பற்றி ,அக்னி பூமியில் அதிசயமாய் குளிர்ந்து மழை பெய்து ஒரு அருவி கூட மலையில் உருவானது பற்றி , புதியதாய் வந்திருக்கும் ஒரு அமெரிக்ககாரர் நட்பு பற்றி ..வந்த  கடிதத்தில் கவித்துவம் இல்லை..

“நிரஞ்சன் உன் விருப்பப்படியே சென்னை வந்துவிடுகிறேன் ,உனது கூடவே இருக்க விருப்பம் “ என்று முடிந்திருந்தது.



கடிதம் வந்த மறுகணம்  செக்ரட்டரியை கூப்பிட்டான் “லாவண்யா ,நான் திருவண்ணாமலை போகிறேன் .வரும்போது என் கூட அப்பா வருகிறார் ,என்னோடு நிரந்தரமாய் இருக்க என்னோட ரூமை மாடிக்கு மாற்றிடு  ஏ ,சி சப்தம் போடறாப்பல இருக்கு ,பார்த்திடு “ 

“சரி “ என்றாள் .


நினைத்தபோது சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சுதந்திரம் நிரஞ்சனுக்கு இருந்தது. இண்டெர்வியூவில் கடைசி யாக ஒரு பெங்காலியுடன்  மோதி ஜெயித்தபோது 

“என்ன வசதி வேணும்?’ என்ற இண்டர்வியூ  போர்டின் கேள்விக்கு 

“நினைச்சப்ப திருவண்ணாமலை போகணும் ஆனா நினைப்பு மாசத்துக்கு ஒரு தடவை மேல வராம பார்த்துக்கிறேன். “

“அவ்வளவு பக்தியா ?”

 “இல்லை பக்தி மட்டும் இல்ல ,அப்பா மேல பாசம் “ என்றான். 


சென்னை நீலாங்கரையிலிருந்து நாலரை மணிநேர பயணம் .பயணங்கள் சுகமானவை. கூடவே கற்பனை குதிரையும் சேர்ந்து விட்டால் போதும் , இன்னமும் செரிமானம் ஆகாமல் தங்கிவிட்டதை  திரும்ப கொண்டு வந்து அசைபோடல் பெரிய சுகம்!

 

“ முக்யா ,அப்பாவுக்கு ஒரு சிறு குறை கூட தெரியக்கூடாது ,திருவண்ணமலையை அப்படியே இங்க கொண்டு வருவது கஷ்டம் , ஆனா ..”

“சரிங்க ,நான் பார்த்துகிறேன் !” என்றாள் முக்யா.


முதலில் மறுக்காமல் சரியோ,தவறோ ,”சரி ,சரி “ என்று சொல்லும் மனைவி பாக்யம்.


“சோபா கம் பெட் ஒன்னு புதுசா வந்திருக்கு  ,அப்பாவிற்கு வாங்கிடலாம் “

“ஆமா ,மத்தியானம் படிக்க ,ராத்திரி படுக்க  வசதி “ என்றாள்  முக்யா.

“சொல்ல மறந்துட்டேன் ,அப்பாவிற்கு பிரம்ம ஞான சபையிலே மெம்பர்ஷிப் கேட்டிருக்கேன் ,பார்த்து வாங்கணும் “ என்றான் நிரஞ்சன் .


எதையும் பார்த்து பார்த்து செய்தாள் முக்யா .


டாட்டா எஸ்டேட்டின் ஹாரன் சீரலில் “எதிர்த்தாப்ல  மாட்டு வண்டி சார் ,

லாந்தர் விளக்கு கூட இல்ல  “ என்றான் டிரைவர்  தாமு.


முகம் தெரியாத முக்யா மறைந்து போனாள்.



கோவில் வாசலில் காத்திருந்தான் நிரஞ்சன். மார்கழி மாதத்தில் விடியற்காலை மூன்றரை பூஜைக்கு வந்து ஸ்வாமியை பள்ளி எழுப்பும்  கூட்டத்தில் அப்பாவும் ஒருத்தர். 


உருவில் சிறிதான அம்பிகையை அப்பாவிற்கு நிரம்ப  பிடிக்கும் ,அம்பிகை சந்நிதியில்

 “ அம்மா தாயே ..” என்று காலையில் பக்தி பரவச படுவார் அப்பா .


“எட்டு மைல் அண்ணாமலை சுற்றின வேகம் மனதில் இருக்க ,கால் நடுங்க ,அம்பிகை முன் நின்று ‘தாயே .. சரணம்,சரணம் என்று சொல்வது எவ்வளுவு பெரிய சுகம் தெரியுமா ,நிரஞ்சன் “


நிஜம்தான், நிரஞ்சனுக்கு தெரியும்.


அப்பாவின் எத்தனையோ சுக,துக்கங்களுக்கு அம்பிகை துணை போயிருக்கிறாள்

.”அண்ணாமலைக்கிட்ட சொன்ன உடனே அம்பிகை கிட்ட ஒரு விண்ணப்பம் போட்டிடுவேன். விண்ணப்பம் நிறைவேறிடும்,நிரஞ்சன. .. “


அதிசயம்தான். அப்பாவிற்கு பிழைக்க வந்த ஊர் பிடித்து போனது அதிசயம்தான், 


“எனக்கில்லை,யாருக்கு இந்த ஊர்


பிடிக்காது சொல்,நிரஞ்சன்  ? “




நிஜம்தான் காலையில் அம்மன் சன்னதியில் ‘அம்மா ,அம்மா’ என்று துயிலெழுப்பும் கூட்டம் ஒருபுறம்,மலைதான் பெரிசுன்னு  அனுதினமும் மலை  சுற்றும் கோஷ்டிகள் ,பாதை முழுக்க 

புணருத்ராணம் செய்யும் கோஷ்டி மறுபுறம், ஊர் கூடி தேர் இழுத்து ,தீபம் பார்த்தது

 ‘அரோகோர’ கோஷிக்கும் .!




“ஜோதியில் ஜாதி ஏது ?” 



அப்பாவிற்கு சொந்த ஊர் தஞ்சைக்கு அருகே வரகூர் , திருவண்ணாமலையில் ஹை ஸ்கூல் தமிழ் ஆசிரியராக  வேலை கிடைத்தவுடன் இங்கேயே! . வருடத்திற்கு ஒருமுறை உறியடிக்காக கூடும் வரகூர் கூட்டத்தில் சென்ற நான்கு ஆண்டுகளாக அப்பா இல்லை என்பது நிஜம். 


நிரஞ்சனுக்கு நன்கு வயசு ஆகையில் அம்மா மஞ்சள் காமாலையில் சுமங்கலியாய் போய் சேர்ந்தாள் .இரண்டு பெண்களையும்,நிரஞ்சனையும் விட்டு விட்டு.


“குழந்தைகளுக்காகவாவது நீங்க ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்” சொன்னவர்களை எதிர்த்து  அசையாமல் அப்பா அந்த மலையாய் நின்றார்.


நிரஞ்சனின் அஹமதாபாத் எம் பி ஏ க்கும், இரண்டு பெணகளின் அமோகமான திருமண வாழ்விற்கும் பின்னே அப்பாவின் நிறைய கஷ்டங்கள் ,மாலையில் டியூசன் ,சனி ,ஞாயிறுகளில் இரண்டு அமெரிக்கர்களுக்கு தமிழ் போதனை ,ஆஸ்ரமத்தில் அவ்வப்போது கணக்கு ..முடிந்த நேரத்தில் சுற்று வட்டாரம் முழுக்க புரோகிதம்..


“யார் கஷ்டப்படலை நிரஞ்சன்? அது தகப்பன் சுமை ,சுமந்துதானே ஆகணும்.? என்ன கூடவே கொஞ்சம் தாயார் சுமை சேர்ந்து விட்டது,, அம்பிகை துணை வந்திட்டா ..ஏதாவது பிரச்சனை ,கஷ்டம்னா  அப்படியே வாசல்ல வந்து நின்னுப்பேன், ஏதிரே  அண்ணா ‘மலை ‘, இழுத்து அனைக்கறாப்ல இருக்கும். ‘நான் இருக்கேன்னு  ‘  சொல்றமாதிரி .உடனே நடந்திடுவேன்..எட்டு மைல் நடந்து  பஞ்சமுக தரிசனம் 

வர்ரதுக்குள்ள பிரச்சனைக்கு தீர்வு வந்திடும்,இல்ல ..எதிர்க்கிற வலிமை வந்திடும் ,வலி பறந்திடும், நிரஞ்சன் “ 


இப்படி அப்பா எத்தனையோ முறை சொல்லியிருக்கிறார்.


தன அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் அப்பாக்கள் கம்மி ,அப்படியே இருந்தாலும் வியாபார தந்திரம்தான் கை மாறும். அப்பாவின் அனுபவங்கள் அப்படியே நிரஞ்சனுக்கு  கைமாறியது வாஸ்தவதம்தான்.


அப்பா கோவிலுக்கு வந்துவிட்டார்.  அவருக்கு நடைதான் பிடிக்கும்.கோயில் வாசலில் இருந்து நடந்தார்கள். லேசான பனி இதமாக இருந்தது. இளம் கசப்புடன் அப்பா தந்த காப்பி சுகமாய் இருந்தது. 


“நிரஞ்சன் , இன்னிக்கு பிரதோஷம் ..மலை சூத்த  போறேன் ,வர்ரியா ?”


“சரி “ என்றான்.


“நிரஞ்சன் ,நாளைக்கு மெட்ராஸ் கிளம்பலாம்..”  அப்பா புன்சிரிப்புடன் ஆரம்பித்தார்.


“சரிப்பா, என்னை மன்னிச்சுடு .. இந்த ஊரை விட்டு பிரிஞ்சு   போறது கஷ்டம். சும்மாவா . ஐம்பது வருஷத்து பழக்கம் ..வழக்கம் ..”


“இல்லை ..நிரஞ்சன்,எத்தனையோ பேரை கேட்டு பார்த்துட்டேன், எல்லாரும் நீ சொல்றதுதான் சரின்னு சொல்றா..”


“இல்லப்பா ,எத்தனையோ கஷ்டம் நீ பட்டுட்டே .. உன்னை சுகமா வைச்சிருக்கனும்னு நினைக்கிறேன் ,உங்களை பார்த்தப்போ அது தப்போன்னு படுது .”


“உன் ஆசையும் சரிதான், என் ஆசையும் சரிதான் எதுவும் தப்பில்ல. எத்தனையோ கல்யாணம்  நடத்தி பார்த்துட்டேன், உன் கல்யாணத்துக்கு நானே தடையாக இருக்கலாமா ? வழக்கம் போல அண்ணாமலை கிட்டே மோதி பார்த்திட்டேன், நிரஞ்சன் நீ இன்னும் நீ  அசையலேயே! “


நிரஞ்சன்  அசையவில்லை. அப்பா ரிட்டையராணா கையேடு சென்னை வந்து தங்கி விடுவார் என்றுதான் நிரஞ்சன் நினைத்தான். நிஜம் வேறாக இருந்தது . அப்பா திருவண்ணாமலையிலேயே இருக்க விருப்பப்பட்டார் . 


மலைச்சுற்றல் வாரத்திற்கு இரன்டு முறையானது. இலவசமாய் தமிழ் டியூஷன் .நல்லதோ,கெட்டதோ வெறும் ஒரு ரூபாய் மட்டுமே தட்சணையாய் வாங்கிக்கொண்டு புரோகிதம் செய்தார்,சுற்று வட்டாரம்  முழுவதும். 

“வேதத்தில் தட்சணை திருப்தியாய் தரணும்னு இருக்கு ,எனக்குஒரு ரூபாய் ரொம்ப திருப்தி. பையன் பெரிய வேலை ,பொண்ணுங்கல்லாம் அமோகமா வாழறாங்க .இதே போதுங்க ..”  என்றார் அப்பா. ‘ஒரு ரூபா சாமி “ என்று காரண பெயர் இட்டது சுற்று வட்டாரம்.



அப்பாவை ஸ்ரீராமணாஸ்ரமம் வீட்டை விட்டு வெளியேற்றவே முடியாதோ  என்ற எண்ணம் எழுந்த போதுதான் ,நிரஞ்சன் அஸ்திரத்தை வீசினான் ..அப்பா பலமுறை மோதிப்பார்த்தார் .அப்பா ஆஸ்ரமம் வீட்டை விட்டு வந்தாலொழிய தன கல்யாண பேச்சே எடுக்கக்கூடாது என்றான். வரும் ஆவணியில் முப்பத்திரண்டு முடியப்போகிறது அஸ்திரம்  தவறாக 

பிரயோகம் செய்தோமோ எனற கவலை வந்தது.


“ இல்ல நிரஞ்சன் ,இந்த ஊருக்கு பிரதி உபகாரமா எவ்வளவோ செய்யணுன்னு நினைச்சேன் .நிறைய செஞ்சாச்சு. பகவான் ரமணர் சொல்லியிருக்கிறார். உன் அழகு முழுவதையும் ஒருமுறை காட்டிடு அருணாச்சலம் ,அப்புறம் வேறு ஊர் பார்க்கிற ஆசை வராதுன்னு “

“ ஆமாம். ஊர் சுற்றுளம்  விடாது உனைக்கண்டு அடங்கிட உன் அழகை  காட்டருணாச்சலா “  அட்சரமானமாலை  வரி சொன்னான்  நிரஞ்சன். 



“ ஆம், அதுவேதான், பூரணமாய் பார்த்துட்டேன்,அருணாச்சலத்தை. அதான் உன்னோட கிளம்பிட்டேன் “ என்றார்.


“நன்றிப்பா !”’ 



இடம் பார்க்காது கட்டிப்பிடித்தான். மலை சுற்றிய ஒரு வெளிநாட்டுகாரர் பார்த்து சிரித்தார். தூரத்தே அண்ணாமலை ஐந்து முகமாய் அண்ணா’மலை’ மாறி  தர்சனம் தரும் இடம் வந்தாயிற்று .


தடால் ..நிலை தடுமாறினார் அப்பா. தாங்கிக்கொண்டான்  நிரஞ்சன். கல்-சிறிய கல் தடுத்தது.


“பார்த்தியா அப்பா ,அண்ணாமலையே என் நினைப்பு சரின்னு சாட்சி சொல்லிட்டது “ கடகடவென சிரித்தார் அப்பா. 


“இல்ல ,நிரஞ்சன் ..என்ன மறந்திடாதேன்னு அண்ணாமலையார் சொல்றார் . இந்த கல் என்னோடயே இருக்கட்டும். வேற எதுவும் மெட்ராஸுக்கு எடுத்துண்டு போக வேண்டாம்.” தடுத்த கல்லை எடுத்து தனது  கதர் சட்டை பையில் பத்திர  படுத்தி வைத்துக்கொண்டார். 



“போறப்போ விசிறி சாமியாரை பார்த்திடுவோம் “ என்றார் அப்பா .


“சரிப்பா ,அவரை பத்தி இப்ப நிறைய ஆர்டிகிள் வருது. “.


வாசலில் நிறைய கூட்டம். சாமியின் சீடன் அப்பாவை பார்த்து

 “ஒரு ரூபா சாமி வந்திருக்கு “ என்றான்  சாமியிடம். 

“பையனோட மெட்ராஸ் போயிடலாம்னு இருக்கேன். “ என்றார் அப்பா ஆங்கிலத்தில். 

நிரஞ்சனை தட்டி கொடுத்தது சாமி. 

“”போ..போ..உன் அப்பாவை என் அப்பா காப்பாற்றும்” என்றார் ஆங்கிலத்தில். சாமியின் வார்த்தைகள்  நிரஞ்சனுக்கு புரியவில்லை. 


“ வா,  போகலாம்  “ நிரஞ்சன். வெளியே வந்தார்கள்.

“சாமி பெரியவர். சொல்றது சிலருக்கு சட்டுன்னு புரியும். சிலருக்கு நாளாகும்” 

என்றார் அப்பா .


திருமந்திரத்தோடு ஈஸி சேரில் படுத்திருந்தார் அப்பா. பாதத்தில் வெது வெதுப்பான  நீர். 

நடைக்கு பின் சரியான ஒய்வு .


“நிரஞ்சன் ..பிளாஸ்கில காபி கொஞ்சம் மீந்திருக்கு,கொடேன் “


காபி கோப்பையை நீட்டினான். 


“ச். ச். சளக்..சளக்.. ..” சத்தம் அப்பாவிடமிருந்து வந்தது. 


“அப்பா..அப்பா.. என்னாச்சு ?” அதிர்ந்தான் நிரஞ்சன் .திருமந்திரம் கீழே விழுந்தது.ஒரு வினாடியில் எல்லாம் முடிந்திருந்தது.


ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதது.

 ‘ ஒரு ரூபா சாமி போயிட்டியேன்னு”  

பேரினை நீக்கி பிணம் என பெயரிட்டது, நீரினில் மூழ்கி நினைப்பொழுக நாளாகும்.


என்ன சோகம் இது ?தட்டுத்  தடுமாறி,முட்டி மோதி கோபுரம் ஏறுகையில் அப்பாவும்,அம்மாவும் காணாமல் போகும் சோகம். நடுத்தரமும், அதற்கு மேலாவாணர்களும் வாழ்க்கையில் முன்னாடி போகையில் கூடவே சுகமாய் பெற்றோர்களை வைத்துக்கொள்ள முடியாத சோகம்.


அப்பாவின் சட்டை பையில் வைத்திருந்த கல்லை பத்திரமாய் எடுத்துக்கொண்டான்.அப்பாவின் ஆத்ம நம்பர் பரமு சாஸ்திரிகள்தான் எல்லாம் செய்தார்.


“என்ன பண்றது நிரஞ்சன். அப்பாவோட காரியங்களை சிறப்பா  செய்திடனும். செத்துபோனவா நம்மோடவே பதினோரு நாள் இருப்பதாக சாஸ்திரம் சொல்லறது .நம்ம வீட்டிலேயே எல்லா  காரியமும் செய்திடலாம்.இன்னிக்கு அவர் நினைவா கல் ஊனி காரியம் செய்த வரிசையா 12 நாள் காரியம். “


அப்பா எடுத்து வந்த கல்லை நட்டான். விசிறி சாமி சொன்னது புரிந்தது.


எவ்வளவு கற்பனைகள்.முகம் தெரியாத முக்யா சேவை செய்வதாய்…சோகம் அழுத்த

 “ஹே …”  கூவி அழுதான். நமக்காக எத்தனையோ சோகங்களை 

தாங்கியிருக்கிறார்.இப்படி ஒரு சுகம் கூட தர முடியாமல்..” நினைப்பு  அடிக்கடி வந்தது

.

பத்தாவது நாள் மாலை. இறந்தவர்  புகழ் பாடும் வழக்கம். பரமு மாமா செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் அர்த்தம் சொன்னார். 


அப்பாவின் திதி பற்றிய விவரங்களை சமஸ்கிரதத்தில்  ஒரு சுலோகமாய் எழுதி நிரஞ்சன் கையில் தந்தார். “இது அப்பாவோட திதி குறிப்பு ,தமிழ்லயும் இருக்கு. பத்திரம்”

கூடவே பிறந்தவர்கள் அப்பமும், பொரியும் செய்திருந்தார்கள் .அப்பாவிற்கு பிடித்தமானதெல்லாம் வந்திருந்தது .கனைத்துக்கொண்டு பரமு மாமா பேச தொடங்கினார்,


“ பெரியவரை பற்றி புகழ்ச்சியாய் பேச என்ன இருக்கு? . எல்லாருக்கும் தெரிந்ததுதான். அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம்னு உசத்தியான  செருப்பை பிச்சைக்காரனுக்கு தந்துவிட்டு சும்மா நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். சோகம் தான்.. அடக்க முடியாதுதான். நம்ம கூட வந்து இருக்கலையே ,ஒரு சுகம் கூட நாமே தரலேன்னு ,நம்ம கல்யாணத்தை இருந்து நடத்தி வைக்கலேயே ,பேரன் பூணல்  பார்க்க கொடுத்து வைக்கலேன்னு இருக்கும்.ஆனா  இதெல்லாம் சிறிது. இதைவிட பெரிய இடத்தில் அவர் இருக்கார் .நமக்கெல்லாம் வழி காட்டறமாதிரி. பித்ரு என்ற பதவி கிடைத்திருக்கு . 

கனைத்து த கொண்டார். கனைப்பு  நிரஞ்சனை மேலும் கவனத்தை செலுத்த வைத்தது. 


“ ஹோமத்தில அக்கினிக்கு ஈடா நெய்யை தரலாம்.. அன்னத்தை ஆகுதி செய்யலாம். ஒவ்வொரு தேவருக்கும்  ஒவ்வொன்னு தந்திடலாம். ஆனா இறந்து மிக பெரிய பதவி கிடைச்சித்த பித்ருக்களுக்கு ஈடா எதை தர்றது ? மந்திரம் சொல்றது ..


ஸ்வாகா பித்ரே பித்ரே ஹிதன்னமம 

பித்ரே ஸ்வாகா பித்ரே ஹிதன்னமம..” 


பித்ருக்களுக்கு ஈடா பித்ருவையே சொல்றோம். ஈடு இணையில்லாத நமக்கெல்லாம் வழி காட்டற பெரிய பதவியை பெரியவர் அடைஞ்சிட்டார் !.”


பொறி தட்டியது. காலம் காலமாய் கண்டு வந்த கனவுகள் சிதறின. 

அப்பா மிக பெரிய இடத்தில், சுகத்துடன் இருக்கிறார் என்ற எண்ணம்  மனது  பாரத்தை குறைத்தது.


மறுநாள் காரியத்தில் மந்திரம் இதயத்தில் இருந்து வந்தது

 

“… ஸ்வாகா பித்ரே பித்ரே ஹிதன்னமம 

பித்ரே ஸ்வாகா பித்ரே ஹிதன்னமம..”

எல்லாம் முடிந்தது . ராமு சாஸ்திரிகள் சொன்னார்

 

“நிரஞ்சன்,இதோட காரியம் முடிஞ்சுது ..அந்த நட்ட கல்லை எடுத்துக்கோ ..அப்படியே  துண்டுல சுத்தி  அக்னி தீர்த்தத்தில் போட்டிடலாம். அதுக்கு மந்திரம்  இருக்கு.”


பரமு மாமா மந்திரம் சொன்னார்.நிரஞ்சன் கல்லை  வீசாமல் இடுப்பில் வேஷ்டியில் சொருகிக்கொண்டான் 


“போட்டியா “


“ஆமாம் ,மாமா …” பொய் சொன்னன். கல் இடுப்பில் இருந்தது. 

“வருஷம் ஆகறதுக்குள்ள ஒரு சுபம் செய்திடலாம் ..கல்யாணம் பண்ணிக்க நிரஞ்சன். “


மௌனமாய் இருந்தான் நிரஞ்சன். 


எல்லாம் முடிந்து சென்னை திரும்புகையில் திரும்பி பார்த்தான். பெரிதாய் தெரிந்தது அண்ணாமலை. சட்டைப்பையை தொட்டு பார்த்து கொண்டான். கல் பத்திரமாய் இருந்தது. அண்ணாமலையோடு அப்பாவும் கூடவே இருப்பதாய் உணர்ந்தான். 

செரிமானம் ஆகாத நினைவுகளில் இந்த சோகமும் சேர்ந்து விட்டது. இனி வரும் பயணங்களின் அசை போடலில் சோகம் பெற்றிட்டு எழும். கண்ணீர் விடத்  தோணும். ஆனால் அதை யாரால் தடுக்க முடியும் ? *

நன்றி :குமுதம் 


கதை பற்றிய கதை ;

கதைக்கரு ரொம்ப காலமாய் மனதின் அடித்தளத்தில் ஊறிக்கொண்டிருந்தது .வாழ்க்கையில் சற்று வெற்றி பெற்றதும் ,அதை காண கொடுத்து வைக்காத பெற்றோர்களை நினைத்து ஏங்கும் உள்ளங்கள் நிறைய ! இதுவே எனது முதல் கதை !



  






                                           பித்ரு

கருத்துகள்