வாழும் மனிதருக்கெல்லாம்….

 வாழும் மனிதருக்கெல்லாம்….

-திருவருணை சிவசு 



மகளிர் தின சிறப்பு சிறுகதை 

(முந்தய கல்கி நினைவு சிறுகதை போட்டியில் பிரசுரமான கதை ..)


ரமணாஸ்ரமம் . அப்பா தியான மண்டபத்தில் இருப்பதாக சொன்னார்கள். காத்திருந்தாள் நிவேதிதா.

காத்திருப்புகள் சில சமயம் அவசியமானது. சில சமயம் எரிச்சல் ஊட்டக்கூடியது. நிவேதிதாவிற்கு காத்திருப்புகள் புதியவை அல்ல. மந்திரியின் வருகைக்காக ,எம்.எல்.ஏ.யின் வருகைக்காக ,சில சமயம் முதல்வரின் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்திருக்கிறாள்  . அப்பாவின் தியானம்  முடிந்து அவரின் வருகைக்காக காத்திருப்பது சற்றே மாறுதலாய் , பெரும் சுகமாய் இருந்தது . எதிரே ‘சும்மா’ பரந்து விரிந்திருக்கும் அண்ணாமலை கூடுதல் சுகம் தந்தது.



நிவேதிதாவின் பார்வை மலை மீதிருந்த பல திருப்பங்களின் மீதும், அழகான வளைவுகள் மீதிருக்க மனம் மட்டும் வாழ்வின் திருப்பங்கள் மீது. 


நிவேதிதாவின் பள்ளி இறுதித் தேர்வில் முதல் திருப்புமுனை வந்தது. மாநிலத்தில் முதலாவதாக வந்திருந்தாள். சந்தோஷ பட அம்மா இல்லாது  போனாள் .


அப்பா சுமை கூடினாலும் கணம் தெரியாது சுமந்தார். அப்பா ஆர் .கே . நியூக்ளியர் பிசிக்ஸ் பி,எச்.டி முடித்த கையோடு கல்பாக்கத்தில் தலைமை என்ஜினீயர் வேலை. வேலை நிமித்தமாக கம்ப்யூட்டர் பற்றி தெரிந்து கொள்ள நேர்ந்தது ,முழுக்கவனமும் அதில் திரும்பியது. கம்ப்யூட்டர் கண பரிணாமம் முழுக்க தெரிந்தபோது ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவிக்கு வந்தாயிற்று. 


வழிகாட்டுதல் என்பது பெரிய விஷயம். இதுதான் வழி என்று சொல்வது கடினம்.’இஷ்டபடி செல்’ என்பதும் வழிகாட்டுதல் இல்லை. அம்மா இல்லாத பெண்ணுக்கு வழிகாட்டுதல் சிரமம். 

நிவேதிதாவின் விருப்பு வெறுப்பு அறிந்து வழிகாட்டினார் ஆர்.கே. பட்ட படிப்பிற்கு பின் அண்ணா யுனிவர்சிட்டி கம்ப்யூட்டர் எம் .இ . மேற்படிப்பிற்கு சென்றபோது உச்சி மோர்ந்து கேட்டார் 

‘நிவேதி, அப்பா இருக்கிற துறையில்தான் பிரகாசிக்கணும்னு இல்ல’ 


பதிலாய் நிவேதிதா ஒரு கடிதம் காண்பித்தாள். கம்ப்யூட்டர் மாத இதழ் ஒன்றில் அவள் எழுதி வெளிவர இருக்கும் ஒரு கட்டுரை. ஆணைத்தொடர் சம்பந்தமாக அவள் எழுதி வெளிவர இருக்கும் கட்டுரை. ஆணைத்தொடர் சம்பந்தமான  சில சிக்களான  கேள்விகளுக்கு விடை இருந்தது அந்த கட்டுரையில் .

‘சூப்பர் நிவேதி. ஆனா யு எஸ் .போய் செட்டிலாகிற எண்ணம் மட்டும் வேணாம்மா . கேம்பஸ் இன்டெர்வியூவில் டாடா கன்சல்டன்சி வேலைக்கான உத்தரவு. கூடவே இன்னொரு அரசாங்க முத்திரையிட்ட கவர். ஐ .ஏ.எஸ்.தேர்வில் தேசிய அளவில் மூன்றாவதாக வந்திருந்தாள் .





ஒரு நாள் முழுக்க யோசித்தார்கள் தந்தையும் மகளும். ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சில முடிவுகள் கிரி வளத்தில் கிடைக்க கூடும். நிலவொளியில் மலை சுற்றும் பாதையில் அப்பாவும்,பெண்ணும். 

‘நிவேதி ,டி .சி .எஸ் .க்கு உன்னை போல இன்னொரு ஆள் கிடைப்பதில் சிரமம் இல்லை. நம்ம இரண்டு பேருக்கும் இப்போ பணம் குறியில்லை . என்னோட பணம் மட்டுமே போறும். ஆனா நீ ஐ .ஏ .எஸ் . முடிச்சிட்டு கலெக்டரா வந்தா நிறைய செய்வேன்னு தோணுதம்மா “

பெண் அப்பாவிற்கு கட்டுப்பட்டாள் . பயிற்சிக்கு பஞ்சாபிற்கு பறந்து போனாள் . 


ஆர்,கே பணியில் இருந்து விடுபடும் வயது வந்ததும் இன்னொரு புதிய பதவி  தந்து அவரை தக்க வைத்துக்கொள்ள முயன்றது அந்த நிறுவனம். 

‘இல்ல .. போறும்..நான் வரேன் ..” என்று சொல்லிவிட்டார். சொல்லி இரண்டு மாதம்  இருக்கும் செழிப்பான அந்த மாவட்டத்திற்கு கலைக்டராக நியமனம் வந்தது நிவேதிதாவிற்கு. 

‘நிவேதி, நீ மட்டும் புதிய இடத்துக்கு போம்மா .கூடவே நம்ம சமையல் மாமியை வைச்சுக்கோ .எனக்குள்ள நான் யார்னு தேடற சமயம் இது. அதுக்கு உன்னோட ஓட்டம் சரியா வராது  இப்போதைக்கு எனக்கு சரியான இடம் ரமணாஸ்ரமம்தான். ‘ 

மவுனமாக அப்பாவை பார்த்தாள் நிவேதிதா . அவளின் பார்வையில்  பிரிவு தெரிந்தாலும் அப்பாவின் எண்ணத்திற்கு குறுக்கே நிற்கவில்லை .

.

கண்டிப்பும் கருணையும் அதே சமயம் ஆணவமும் பிடிவாதமும் இல்லாத ஒரு கலெக்டரை அந்த மாவட்டம் முதன் முதலாக சந்தித்தது . டிரைவர் தாணுவை கூட மரியாதையோடு கூப்பிடுவதை ஆச்சர்யத்தோடு பார்த்தது கலெக்டர் அலுவலகம். ஆச்சர்யம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. 


தன்னிடம் இருப்பதை பிறரிடமும் எதிர்பார்ப்பது மனிதம். நேர்மையையும் ,கண்ணியத்தையும் பிறரிடம் எதிர்பார்த்தாள்  நிவேதிதா. அவளின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தனர் சுற்று வட்டார அலுவலர்களும்,அரசியல் சூழலும். 


செழிப்பான அந்த மாவட்டத்தின் நெல் முழுக்க அரசாங்க கிடங்குக்கு போகாமல் 

அந்த தனியார்  அரிசி மில்லுக்கு போவதை அறிந்தாள் நிவேதிதா. மில்லுக்கு சீல் வைத்து அரசாங்கத்திற்கு ஒரு அறிக்கை அனுப்ப ,பரிசாக வந்தது மாறுதல் உத்தரவு. 

மாற்றம் இடத்திற்கு மட்டும் தான் .மனத்திற்கோ ,நிவேதிதாவின் செயல்களுக்கு அல்ல . ஒரு வருட இடைவெளியில் மூன்று இடம் மாறியாயிற்று . இதோ இப்போது இந்த பின்தங்கிய மாவட்டம் வந்து மூன்று மாதமாகிறது. 



நிவேதிதாவின் வரவு ஆளும் கட்சியினருக்கு அதிர்ச்சியாக  இருந்தது. உள்ளூர் எம்.எல்.ஏ வின்

  ஏ .சி.  தியேட்டர் லைசன்ஸை கேன்சல் செய்த முதல் கலெக்டர் நிவேதிதாவாகத்தான் இருக்க முடியும்,அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்தது தியேட்டர்.


‘மாறுதல் நிச்சயம் ‘ என்று பேசிக்கொண்டார்கள். அதுவும் அந்த விபத்திற்கு பிறகு. ஊருக்கு வெளியே இணைப்பாய்   இருந்தது அந்த புதிய  பாலம் . பாலம் கட்டியது ஆளும் கட்சியினரின் மாவட்ட செயலாளர். கட்டுமான பணியில் ஊழலால் பாலம் வலுவிழந்து ஒரு பயணியர் பேருந்து விபத்துக்குள்ளானது ஒரு புதிய வில்லங்கம். 


காண்ட்ராக்டர் மேல் தான் தவறு என்றும் முழு நஷ்ட  ஈடும் அவர்தான் தர வேண்டும் என குறிப்பெழுத ,விவகாரம் சட்டசபை வரை போனது. 


நிவேதிதா  நிலைகொள்ளாமல் இருந்தாள் . உருப்படியாக ஏதும் செய்யாமல் இப்படி ஊர் ஊராக  மாறுதல் பெற்று செல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்ற நினைவு அடிக்கடி எழ ஆரம்பித்துவிட்டது.


செழிப்பிலோ,செல்வத்திலோ குறையில்லாத தான் இப்படி அல்லல் பட வேண்டுமா என்ற எண்ணம் மேலோங்கி விட்டது. பேசாமல் இந்த கலெக்டர் வேலையை விட்டுவிட்டு மீண்டும் கம்ப்யூட்டர் பக்கம் போய்விடலாம்  என யோசிக்க ஆரம்பித்தாள் . விளைவு இப்போது ரமணாஸ்ரமத்தில்  இருக்கிறாள் தந்தையின்  ஆலோசனை கேட்க.


தியான மண்டபம் விட்டு வெளியே வந்த ஆர்.கே. வெளியில் நிவேதிதா இருப்பதை அறிந்து,ஆவலாய் பின்பக்கம் சென்று பரிவுடன் தொட்டார் பெண்ணை. 

‘என்னம்மா தீடீர்னு, நாளைக்கு ரமணர் ஆராதனை ,பார்த்துட்டு போகலாம்ல ‘ 

‘போற மாதிரி  இல்லப்பா’ 

 ‘என்னம்மா சொல்றே ?’

நிவேதிதாவின் அனைத்து பணி மாறுதல்களையும் அறிந்தவர் தான் ஆர்.கே. கூடவே நிவேதிதாவின் சிந்தனைகளையும் அறிந்தவர் என்பதால் அதிகம் முக்கியத்துவம் தரவில்லை எந்த செய்திகளுக்கும் 

எந்த பாவனையும் காட்டாமல் பெண் சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டார்.


றுநாள் ஆர்த்தனை நிரம்ப  கூட்டம். 

‘இங்க ஆராதனைக்கு நல்ல சாப்பாடு உண்டும்மா. ஆனா என்னோட வழக்கம் வேற .ராத்திரி வரைக்கும் விரதம். முடிஞ்சா இருந்து பாரேன் நீயும் ‘

‘வழக்கம் இல்லையேப்பா ..’

‘சும்மா இருந்து பாரேன் பட்டினி இருக்கிறது கூட ஒரு சுகம் தானம்மா ‘

‘சரி’ என்றாள்  நிவேதிதா. இதுவரை பட்டினி  என்றால்  என்ன என்றே அறியாதவள். எங்கு போனாலும் சமையல் மாமியின் சாப்பாடு போகும்,எந்த கேம்பானாலும் .கூடவே சாப்பாடு  உண்டு. 


பூஜைக்கு பின் பசி கூடியது.


‘எப்படிப்பா இந்த வயசில  உங்களால் இப்படி பட்டினி  இருக்க முடியுது ? 

‘கஷ்டம் இல்லை நிவேதி .பழகிட்டா  சரியாகும். 

மாலை  பூஜைக்கு போனவர் கையில் மாலை செய்தித்தாளுடன் வந்தார். ‘உன்னோட மாவட்ட  செய்தி உள்பக்கம் தலைப்பா வந்திருக்கும்மா ‘


‘என்னப்பா என்னோட மாறுதல் உத்தரவு ? ‘ என்றாள்


‘இல்லம்மா பட்டினிக்கு உன்னோட மாவட்டத்தில் ஒரு குடும்பமே பலின்னு’ 

‘என்னப்பா சொல்றீங்க ,நாம இருக்கிறது இந்தியா,எத்தியோபியா இல்ல’ என்றாள் 




‘தமிழ்நாட்டிலே உன்னோட மாவட்டம் ஒரு பின்தங்கிய மாவட்டம்னு தெரியுமில்ல ‘

‘ஆமா தெரியும்.ஆனா பட்டினியால்  சாவுன்னு ஒத்துக்க முடியல ‘ 

‘பட்டினி சாவா ?” பத்திரிகையை நடுக்கத்துடன் வாங்கி பார்த்தாள் .  காலையில் இருந்து பட்டினி என்பதால் நடுக்கம் கூடியது. 

‘நிஜம்தாம்மா நிவேதி . இன்னமும் இந்தியாவில் ஒரு வேளை சோத்துக்கு கஷ்டப்படற ஜனங்க இருக்காங்க. இந்த ஆஸ்ரமத்தில பகல்ல ஏழைகளுக்கு அன்னதானம் நடக்கும் . தினம் ஒரு புது முகம் பார்க்கிறேன்’

நிவேதிதா மவுனமாக இருந்தாள்  அப்பாவே  தொடர்ந்தார்.

‘போம்மா , போ , உன்னோட இடத்துக்கு போ இங்க நான் எப்படி ஒரு யோகி கணக்கா 

 இருக்கேனோ அபப்டித்தான் நீயும்.யாருக்கு கஷ்டம் இல்ல உன்னோட வேலையே மத்தவங்களோட துக்கங்களை துடைக்கிறதுதான். அதில் உன்னோட கஷ்டம் பார்க்காதே.அரசியல்வாதிங்க மாறிட்டே இருப்பாங்க ,ஆனா நீ அப்படி இல்ல. ‘

‘இல்லப்பா நானும் ஒரு லட்சியத்தோட தான் இருந்தேன். ஆனா முடியல  அப்பா.’

‘பரவாயில்லை உனக்கு ரமணரோட  அட்சர மணமாலை வரி ஞாபகம் இருக்கா “

‘லட்சியம் வைத்தருள் அஸ்திரம் விட்டனை பட்சித்தான் பிராணனோடு அருணாச்சலா ‘

என்றான் நிவேதி.

‘ஆமாம் அதுதான். நீ வெறும் அஸ்திரம்  இல்ல பிரம்மாஸ்திரம். மாவட்ட ஆட்சியாளர்  என்கிற அஸ்திரம் அம்மா ‘


நிவேதிதா கிளம்பி போனாள் . அடுத்த இரு வாரம்  கலெக்டர் அலுவலகம் அமலி துமளி பட்டது. பட்டினி சாவு இல்லை என்றும் வெறும் வயிற்று போக்கு என்று பொய் சொல்ல சொன்னது அரசு. முதன் முறையாய் பொய் சொன்னாள் . மாவட்ட நிலையை மாற்றி காண்பிக்க வேண்டும் என்ற  உந்துதல் பொய் சொல்ல தூண்டியது. அணைத்து அலுவலர்களையும் ஒன்று கூட்டினாள் . 

‘புதுசா  ஒரு முயற்சியில் இறங்க போறேன். எனக்கு உங்களோட உதவி  வேண்டும் என்று அலுவலக மக்களிடம் வேண்டினாள்.

‘நிச்சயம் செய்யலாம் மேடம்’  என்றார்கள். 

‘நம்ம மாவட்டம் வறட்சியான மாவட்டம்தான்,ஆனா பட்டினியில் மனுஷங்க சாகற  அளவுக்கு வறட்சின்னா அதுக்கு நாம்தான் காரணம். நாம நினச்சா இந்த நிலைமை முழுசா மாத்திக்காட்டலாம். நீங்க எல்லா வகையும் உதவனும்’  என்றாள் .

மாவட்டம் முழுக்க ஒரு ரவுண்டு வந்தாள் . பல பெரிய மனிதர்களை முதல் கிராமத்து மக்கள் வரை நேரடியாக சென்று ,தரிசு நிலம்,நன்சை நிலம் என பல விவரங்களை சேகரித்தாள் . ஒவ்வொரு விவரமும் கணிப்பொறிக்கு புகுத்தினாள்  . நீர் வளம் குறித்து பல விவரங்களை கம்ப்யூட்டர் டேட்டா வாக மாற பல தகவல் அலசல்கள்  செய்தாள் . அவளின் கம்ப்யூட்டர் அறிவு  மிக உதவியது. கம்ப்யூட்டர் தகவல்களை  அலசிக்கொண்டிருக்க பின்னால் நிழல் ஆடியது.  பின்னே சமையல் மாமி நின்றிருந்தாள். 

‘என்ன மாமி  ,நீங்க போங்க எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு.முடிச்சிட்டு 

படுத்துக்கிறேன் ‘ .



‘இல்ல நிவேதி .போன  மூணு வாரமா நீ ராத்திரியில சாப்பிடறதில்லை . பால் கூட வேணாம்கிற .அம்மா திதிக்கு கூட அப்பா உனக்கு தனியா டிபன் கொடுக்க சொல்லிடுவார். ஆனா ..’

‘இருக்கட்டும் பரவாயில்லை மாமி , நான் ராத்திரியில சாப்பிடறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன். என்னோட இலட்சியத்தில் வெற்றி பெறனும்னா பட்டினியோட அருமை எனக்கு தெரியனும் . எனக்கு நம்பிக்கை இருக்கு மாமி ‘ 

சொல்லிவிட்டு கம்ப்யூட்டரை இயக்க  தொடங்கினாள் நிவேதிதா. 

வெளியே ,வானில் விடிவெள்ளி பளிச்சென்று தெரிய ஆரம்பித்தது.





கருத்துகள்