நீ பாதி ..நான் பாதி கண்ணாளா....

 நீ பாதி ..நான் பாதி  கண்ணாளா....

                                                          






 நீ பாதி ..நான் பாதி  கண்ணாளா....

                                                           -திருவருணை சிவசு



வீட்டின் வரவேற்பறை ஒட்டிய பூஜை அறையில்ஓவியர் வினுவின் வீர ஆஞ்சநேயர் பட  வாலில் பொட்டிட்டு கொண்டிருந்த  அம்மா ,வாசலில் பெண் நிரந்தரா ஷூ  அணியும் சத்தம் கேட்டு  எட்டிப்பார்த்தாள்


நிரந்தரராவும் அம்மா பக்கம் திரும்பி ,’அம்மா இன்னிக்கு எனது பிறந்தநாள் அண்ட் புரமோஷன்  பார்ட்டி ,கிண்டி .டி சி. யில , வர்ற லேட்டாகும், டின்னரும் வேண்டாம்’   என்றாள்.


அம்மா பெருமூச்சு விட்டாள் . பெரு மூச்சுக்கு காரணம் , தான் செய்யும் ஒருமண்டல பூஜையில்இன்னும் ஆஞ்சநேயர் வாலில்  மூன்று பொட்டிட மட்டுமே இடம் இருந்தது. நிரந்தரா  யாரையாவது கைப்பிடிக்க வேண்டும் என்று கடந்த 45 நாட்களாக சிரத்தையாக பூஜை செய்து வருகிறாள். நிரந்தராவின் கல்யாணம் குறித்த தனது கடைசி பிரார்த்தனை இதுவாக இருக்க வேண்டும் என்று வேண்டினாள்.




சென்னையில் , .டி .செக்கூரிட்டியில்  வேகமாக   வளர்ந்து வரும் ஒரு நிறுவனத்தில், நிரந்தரா , சைபர் செக்யூரிட்டி ப்ராஜெக்ட்  மானேஜராக  வேலை. சிஸ்கோவில் இருந்து விலகி  புதிய ஸ்டார்ட்-அப் தான் நல்லது  என்று இடம் மாறியிருக்கிறாள் . அவள் வந்த மூன்று வருடத்தில்  கம்பெனி அசுர பலம் எடுக்க நிரந்தரா  இன்று புராஜக்ட் மேனேஜர், 80 பேர் கொண்ட டீமிற்கு தலைவி. ஆறு அடுக்கு பாதுகாப்பு கொண்ட  டேட்டா சென்டர் அமைப்பதிலும், பராமரிப்பிலும் இந்தியாவில் சிறந்த  டீம்  என்று பெயர் வாங்கியிருக்கிறது நிரந்தராவின்  டீம்.


பார்ட்டி ஏற்பாடுகளை கவனிக்க முன்னமே வந்துவிட்டாள் . கையில் யாருக்கு என்ன காக்டைல் என்ற மெயில் லிஸ்ட் . டீம் லீட்  வினோதினி மெக்சிகோ டெக்குலாவும்,அதே டீமில்  இருக்கும்  அவளது கணவன்  பெப்ஸியும் டிக் செய்திருப்பதை பார்த்து புன்னகைத்து ,இன்னைக்கு பார்ட்டி முடிந்து வீட்டிற்கு திரும்ப வினோதினி கணவன்தான்  காருக்கு டிரைவராக இருக்கலாம்  என்று யூகித்தவள் , தனக்கு  ஹங்கேரி  ஒயின் லிஸ்டில்  இருக்கிறதா என்று பார்த்தாள். டோகஜ் இருந்தது


 சென்ற வருடம் புடாபெஸ்ட்  போன போது அருந்தியது


 ‘மேடம் ஏஜ் நம்பர் டிஸ்பிலே கேக்கில் வைக்கனுமாஎன்ற கேள்வியோடு வந்த ஹோட்டல் சிப்பந்தியை முறைத்தாள் .  


ஏன்  என் வயசு மெழுகு வத்தி  நம்பர் இல்லயா?  “ 


இல்லீங்க மேடம் பார்த்தா  20 வயசு மாதிரி தெரியுது ”  என்ற சிம்பந்தியை  முறைத்தாள் .

கான்பிரான்ஸ் ஹாலின் விளக்குகள் அணைக்கப்பட்டு ,இரண்டு சிப்பந்திகள் நீண்ட கம்பி மத்தாப்பை  கொளுத்தி மத்தாப்பு வெளிச்சத்தில் ,கேக்கின் மீதிருந்தஹேப்பி  பர்த்டே நிரந்தரா அண்ட் கங்கிராட்ஸ்   ‘  என்ற எழுத்துக்களோடு பளிச்சிட்டது 32 என்ற எண் ,அவள் வயது! மு. (முதிர் கன்னி) என அலுவலக பட்டப்பெயர் கூட !







நிரந்தரா  கையில் லாவகமாக ஒயின்  கிளாஸை ஏந்தியபடி , ஒவ்வொரு டேபிளாக வலம் வந்தாள்

நிறைய , பல வித வாழ்த்துக்கள் , பூங்கொத்துக்கள் . சில வாழ்த்துக்கள் மட்டுமே நிஜம். சில முகம் பார்த்து சொல்ல ,சில மார்பு பார்த்து வாழ்த்து சொன்னதை சகஜமாக எடுத்துக் கொண்டாள். திண்ணிய மார்பு அவளது இயற்கை


இடது கையில் டக்கீலா கிளாஸுடன்  இருந்த, டீம் லீட் வினோதினி கேக்கில் சிறு  துண்டை எடுத்து நிரந்தராவிற்கு  பாதியை ஊட்டி,மீதி பாதியை  தன்  வாயில் போட்டு கொண்டு 

 ‘நீ  பாதி ..நான் பாதி …’ என்றாள் . கேக் இனிப்பில்லை ,இது காரம். சுளீர் என்ற காரம். சந்தோஷ தருணங்களில் ,மற்றவர்களின்  சோகத்தை  நினைவு படுத்தும் குணம். ஒரு மெல்லிய புன்னகையை பதிலாக தந்து, ‘ என்ன வினோ ,இன்னிக்கு உன் ஹப்பிதான் டிரைவரோ  ..’ என வினவ 

ஆமாம்,போன பார்ட்டியில் நான் தானே ட்ரைவர்.’  என்றாள்இது போல நிறைய ஜோடிகளின்  ஒருத்தர் மட்டும் ஆல்கஹால் இல்லாத ட்ரிங்க்ஸ்ஜோடிகளுக்குள்ளும் ,நண்பர்களுக்குள்ளும்  எழுத படாத ஒப்பந்தம். போலீஸ்  பயம் கூட . நிரந்தரவும் ஒரு தற்காலிக டிரைவருக்கு  சொல்லியியிருக்கிறாள்.


இரவு 11 மணி ஆகிவிட்டது. ஒவ்வொருத்தராக விடை பெற ஹூண்டாய் அவென்யூ காரில் முன் சீட்டில்  அமர்ந்தாள்வழக்கமாக வரும் டிரைவர்தான் ,வீடு தெரியும். ஒயினில் லேசான மயக்கத்திலும்  வினோதினிநீ பாதி ..நான் பாதிஎன்று சொன்னது நினைவுக்கு வந்தது. அவளுக்கு தெரியுமா தனது நீ பாதி ,நான் பாதி கொள்கை பற்றி?   அம்மாவே புரிந்து கொள்ளாதபோது வினோதினிக்கு என்ன தெரியும் ? . ஒரு குழப்பத்தில் பிறந்த தெளிவுதான் நீ பாதி ..நான் பாதி ..என்பது!


அண்ணா யூனிவெர்சிடியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பி. ரேங்கில் 

வந்த கையேடு ,பெங்களூரு சிஸ்கோ காரர்கள் முதல் ரவுண்டிலேயே கேம்பஸ் இன்டெர்வியூவில்  தேர்ந்தெடுக்க ,நிரந்தராவின் அப்பாவிற்கும்,பெண்ணுக்கும் பெருமை பிடிபடாமல் இருக்க ,அம்மாவிற்கு அந்த வேலை பெரிதாக படவில்லை. ஒரே பெண்ணை கல்யாண  கோலத்தில் பார்க்கவே விருப்ப பட்டாள்.  ‘பார்எம் பொண்ணு என்னை விட சிறப்பா வருவா.’  என்றார் நிரந்தராவின் அப்பா .டீ. துறையில் டைரக்டர். நிரந்தரா  அப்படி வந்ததை , பார்க்க அவர் இல்லை. ஒரு விடியற்காலை நெஞ்சுவலியால் மருத்துவமனை  போகு முன்னே உயிர் பிரிய  அம்மாவை தனியாக  இருக்கவிட  விரும்பாமல் , சென்னை திரும்ப வந்து ஆறு வருடம் ஆகிவிட்டது.


சென்னை வந்தது முதல் கல்யாண ஏற்பாடுகளில் தீவிரமாக அம்மா இருந்தாள். கணவன் இல்லாது கல்யாண வரன்  தேடுவது சுலபமாக இல்லை


ஒரு பெண்ணின் வாழ்க்கை கல்யாணத்தில் பரிமளிக்கிறதுன்னு நம்புகிற  போன ஜெனரேஷன்  மனுசி  நான். ஒயின் குடிக்கிறது  தப்பில்லை சொல்ற இப்போதய ஜெனரேஷன் நீஆனா, என்னோட கல்யாண  நம்பிக்கை சீக்கிரமா நிறை வேறணும். அப்பா வருஷ காரியம் முடியறதுக்குள்ள, கல்யாணம் செய்தா  நல்லது  குழந்தை   ’  என்றாள்  அம்மாஅப்போது 25 வயது குழந்தை  நிரந்தரா.


அம்மாவும்,பெண்ணும் கட்டம் கட்டி பிரபல ஆங்கில பத்திரிகையில் வரன் தேவை  விளம்பர  கொடுத்தார்கள்ப்ரீமியத்தில் வலை தளங்களில் மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுத்தார்கள்.

அதிக அளவு பணம் கட்டி திருமண தகவல் வலை தளத்தில் பதிவு செய்தார்கள். தனது சுய விவரத்தை நிரந்தராவே பூர்த்தி செய்து வலை தளத்தில் ஏற்றினாள் . அலுவலக பார்ட்டிகளுக்கு போகும் பழக்கமும், ஒயின் குடிப்பது பற்றியும் அந்த திருமண தகவல் குறிப்பில்  அவள் குறிப்பிட தவறவில்லை. இது எதுக்கு இப்ப சொல்லணும் என்ற அம்மாவின் கேள்விக்குஅம்மா இந்தக்காலத்து பையன்களுக்கு இது பெரிய விசயமில்லைஎன்றாள் .  


அம்மாவும்,பெண்ணும் அலசி ஆராய்ந்து பத்து வரன்களின் நகுல் தேர்வானான்

யு .எஸ்.சியாட்டலில் அமேசானில்  வேலை. முதலில்  அம்மாவை விட்டு போக விரும்பவில்லை என்றவளை  ,அவளது அம்மா சமாதான படுத்தினாள்.  


எனக்கென்ன இங்க பிரச்சனை. ஒருநாள் பிலைட்ல வந்தாதேவைன்னா நீயோ,நானோ பார்த்துக்கலாம்.’ 


நகுலின் அப்பாவும்.அம்மாவும் அமெரிக்கா வாசம் என்பதால் திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகளை பெண் வீட்டாரே செய்ய வேண்டுகோள் வைக்க   அதற்கான செலவுகளை தாங்கள் ஏற்பதாக சொல்ல எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்றி செய்தாள் நிரந்தரா.   எல்லாமே  வீடியோ காலில்தான்இடையில் மூன்று முறை நகுல் பேஸ் டைமில் வந்தான். அப்பா இல்லாத குறை தெரிய கூடாது என்பதால் உறவினர்களும் ஆளுக்கொரு பொறுப்பேற்க எல்லா ஏற்பாடுகளும் தயார்


நிச்சயதார்த்த தேதி இரண்டு நாள் முன்பு நகுலிடம் இருந்து ஒரு வாட்சப் செய்தி.  ‘நிச்சயதார்த்த ஏற்பாடுகளை நிறுத்தவும். ‘ என்றுநிரந்த்ராவின் அம்மா நகுலின் பெற்றோர்களுக்கு தொடர்பு கொள்ள முயற்சிக்க , எல்லாமுமே எதிர் முனையில் துண்டிக்கப்பட , எல்லா தகவல் தொடர்பு முயற்சி அனைத்தும் வீண். என்ன காரணம் என யாராலும் யூகிக்க முடியவில்லைநிரந்தராவே நிச்சயதார்த்தை நிறுத்தியிருக்க கூடும் என்ற ஒரு சில உறவினர்களின் பேச்சு நெஞ்சில் முள்ளானது .


அமெரிக்கானா ,உடனே கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டியது தப்புஎன்று ஆளாளுக்கு அறிவுரை வழங்க ,அம்மாவின் இரத்த கொதிப்பு அதிகமாக மருத்துவமனை வரை போக வேண்டியதாகிற்று.


அம்மா நம்ம பேர்ல எந்த தப்பும் இல்ல, எதனால இப்படின்னு இப்ப  யோசிக்கிறதில அர்த்தம் இல்ல. இந்த இன்டர்நெட் உலகத்தில காரணம்  கண்டுபிடிக்கிறது பெரிய விசயமில்லை ,அதை நாம இப்ப தெரிஞ்சிண்டு என்ன ஆக போகிறதுயோசனைதான் மனிதரை கொள்ளும் கொஞ்சம் அமைதியா இரு, வா இந்த வருட கிளப்  மஹிந்திரா வருடாந்திர விடுமுறை முடிய போகுது’  என்று சொல்லி மூணார் சென்றார்கள் அம்மாவும் பெண்ணும்.


ஆறு மாதம் ஆகியிருக்கும் அம்மாதான் திரும்ப கல்யாண  விசயம் ஆரம்பித்தாள்

நடந்ததுநடந்து போச்சு வேற இடம் பாப்போம்,இல்ல உனக்கு யாரவுது பிடிச்சிருந்தா சொல்லு முடிக்கலாம் ‘  என்றாள்


கல்யாண நிச்சயதார்த்தம் நின்று போன விசயம் முதலிலேயே சொல்ல கூடாது என்பது அம்மாவின் எண்ணம். அதற்கு நேர்மாறாக  அடுத்து வந்த வரனிடம்,  ‘எங்க மேல எந்த தப்பும் இல்ல, நிச்சயதார்த்தம் நின்னு போனதுக்குஎன்று நிரந்தரா  சொல்ல   ‘இத முன்னமே சொல்லியிருக்கலாமே ?’  என்றாள் பையனின் அம்மா .  ‘சாரி’  என்று ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு சென்றான்  பையன்.


அடுத்தடுத்து இரன்டு வரண்களும் இப்படியே தட்டி போனது. இரண்டு  வருடம் ஓடிவிட்டது.

அம்மா ஒரு பெண்ணோட வாழ்க்கை ,திருமணத்தில மட்டும் நிறைவடையற விடயமில்லைஎன்றாள் நிரந்த்ரா. அம்மா விடுவதாக  இல்லை . பெண்ணிற்காக எல்லா வேண்டுதலும் செய்தாள்


பல டேட்டா செக்யூரிட்டி விஷயங்களை, சர்வர் ஹாக்கிங் முறைகளை  மிக எளிதாக கையாளும் தனக்கு இந்த மனித மனங்களை புரிந்து கொள்ள முடியவில்லையே என யோசித்தாள் .




என்ன யோசனை நிரந்தரா , வர வார கடைசியில நம்ம டீம் நிவேதாவிற்கு திருச்செங்கோட்டில் கல்யாணம் , உனக்கு டோகஜ் ட்ரின்க்ஸ் கூட அவ ரெடி  பண்ணிட்டா ,நாம   போறம்என்றாள்  வினோதினி.


திருச்சங்கோடு கோவிலில் விநோதியோடு நிரந்தரா சென்றாள் . திருச்செங்கோடு  சன்னிதியில் அர்ச்சகர், ஈஸ்வரன் தனது பாதி உடலையே பார்வதிக்கு தந்திருக்கார் ,அம்பாள்  கிட்ட நீ பாதி, நான் பாதின்னு சொன்ன கடவுள்என்றார்சில சமயங்களில் ஒரு பிரச்சனைக்கு தீர்வோ ,புதிய உத்தியோ  எங்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம். தனக்கு  இந்த ஈஸ்வரன் சந்நிதியில் கிடைத்ததாக எண்ணிணாள்   .  ‘நீ பாதி , நான் பாதி ‘   எண்ணம்  உருவானது


திருச்செங்கோட்டில் இருந்து  வந்தவுடன் அம்மாவிடம்அம்மா ,திரும்ப கல்யாண வரன் பார்க்கலாம். ஆனா ஒரு நிபந்தனை ‘  என்றாள்.





‘‘என்ன?’ என்ற அம்மாவிடம், நீ அடுத்த வரன்   பார் ,அப்போ நேரே பேசிக்கலாம்என்றாள் .


ஒருவேளை என்னையும் கல்யாணத்திற்கு பின் கூடவே வைத்துக்கொள்ள கேட்ப்பாளோஎன அச்சம் அவளுக்கு. எந்த  வீட்டில் இப்படி ஒத்துக்கொள்வார்கள்அம்மாவின் கவலை கூடியது. கூடவே வயோதிக ரேகைகள் முகத்திலும்.


பெண் பார்க்கும் சம்பிரதாயங்களை  நிரந்தரா   கைவிட்டு நாளாயிற்று. ஒரு காபி மீட்டிங் மட்டுமே. அன்று பெண் பார்க்க வந்தவர்களிடம் நேரடியாக நிரந்தரா  பேசினாள் . மாப்பிள்ளை பெண்ணை பிடித்திருப்பதாய் சொல்ல, அம்மா சந்தோஷப்பட்டாள் .


கல்யாண செலவு எங்களுக்கு பெரிய விஷயமில்ல. எங்க வேணா திருமணம் வைச்சிக்கலாம் ஆனா செலவுல நீங்க பாதி ஏத்துக்கணும். கல்யாணம் எளிமையோ, ஆடம்பரமோ எதுவானாலும் எங்களுக்கு சரிஎன்றாள். தன்னை பொறுத்தவரை இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கிற ஆண் ,நிச்சயம் சரியான தேர்வாக இருக்கும் என்ற எண்ணம்.


சமூகத்தில் எத்தனையோ மாறிவிட்டது. முன் போல நேரடியாக கல்யாணத்தில் பணம் வாங்கும் வழக்கம் பெரும்பாலும் இல்லை .இருப்பினும் ஆடம்பரமோ,எளிமையோ எல்லா செலவும் பெண் வீட்டார் தலையில் என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை. சில  இளைஞ்சர்கள் மாறி இருக்கிறார்கள். கல்யாண செலவை சரிபாதியாய் கொடுக்கும் பையன் நல்லவனாக இருக்க வாய்ப்பு என்ற எண்ணம் நிரந்தராவிற்கு.


மாப்பிள்ளை அம்மாதான்இப்பவே இப்படி பாதி  செலவு கேட்கிற  நீங்க பின்னாடி எப்படி இருப்பீங்களோஎன்றாள்  தடாலடியாக

பையன் அப்பாஅம்மா , இது வழக்கம் இல்லையே ?“ என சொல்ல 

எந்த முறையும் தொடர்ச்சியா செய்தா வழக்கம்தான் அங்கிள்என்றாள் .

விருட்டென்று எழுந்த குடும்பம் வெளியேறியது.


நிரந்தரா ,நீ சொல்றது நடக்காது. போகாத ஊருக்கு வழி தேடற நீஎன்றாள்  அம்மாவிற்கு  ஒரு முறைப்பை பதிலாக தந்தாள். தனது நீ பாதி ..நான் பாதி ..கொள்கையை திருமண  தகவல் இணைய தளத்தில் மறுபதிப்பு செய்தாள்


அம்மாவிடம்  ‘அம்மா இத பார் ,நான் அப்டேட்  பண்ண உடனே நிறைய பசங்க என்னோட நீ பாதி,நான் பாதி  எண்ணத்தை பாராட்டியிருங்காங்கஎன்று தனக்கு இணைய  தளத்தில் இருந்து வந்த குறுஞ்செய்திகளை காட்டினாள் .


இங்க பார் ,என்னோட  எண்ணத்தை பாராட்டினதோட  நாளை ,பூனாவில் இருந்து ஒரு பையன் வரான்பிளைட்   சாயங்காலம் தான் ,வர்ற எப்படியும் எட்டு ஆகிடும் ‘  என்றாள்.


அம்மா சந்தோஷப்பட்டாள் . மறுநாள் மாலை வீட்டின் மொட்டை மாடியில் நிரந்தரா  காட்டன்  சேலையில் கம்பீரமாக  இருந்தாள் . தனது  எண்ணத்தை புரிந்து  ஒரு ஆண் வருவது கண்டு.


பிளைட் வரும் நேரம்தான். ஆனால் வானில் குறுக்கும் நெடுக்குமாக பறக்கும் விமான சத்தங்கள்  குறைவானதாக  தெரிந்தது.   




ஐபோன் மெசேஜ் டோன்எடுத்து பார்த்தாள்


கொரோனாவால ,எல்லா பிலைட் கான்செல் ஆயிடுச்சி . நாடு முழுக்க ஊரடங்கு எப்போ வேணா வரலாமாம்நான்  வரலை  ‘  என்றது செய்தி.


நிரந்தரா வானத்தை பார்த்தாள்  அங்கே  ஒவ்வொரு நட்சத்திரங்களாக வரத்தொடங்கியது. வானம்பெரிது. தூரத்தே கலங்கரை விளக்கின் ஒளி  சுழன்றது . கடலும் பெரிது


உலகம் பெரியதுஎன்று தனக்குதானே சொல்லிக்கொண்டு  நிரந்தரா குளிர்சாதன பெட்டியில் பெட்டியில்  இருந்த ஒரு பாட்டில்  தண்ணீரை  கட கடவென குடித்து படுக்கை அறை நோக்கி போனாள்.

 

இன்னும் ஆஞ்சநேயர் வாலில் நிரந்தரா அம்மா பொட்டு வைக்க ஒரு இடம் மட்டுமே இருந்தது  *




Feedback 


 sivasu@yahoo.com 

கருத்துகள்

கருத்துரையிடுக